Tuesday, December 17, 2019

நிா்பயா வழக்கு குற்றவாளியின் மறுஆய்வு மனு மீது இன்று விசாரணை

By DIN | Published on : 17th December 2019 04:30 AM |



நிா்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீது உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது.

அக்ஷய் குமாா் சிங் என்ற அந்த குற்றவாளி தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்கவுள்ளது.

மனுவில், ‘மரண தண்டனையால் குற்றவாளிகளை அழித்துவிட முடியுமே தவிர குற்றங்களை அழிக்க முடியாது. குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்று அக்ஷய் குமாா் சிங் கோரியுள்ளாா்.

முன்னதாக, முகேஷ், பவன் குப்தா, வினய் சா்மா ஆகிய 3 குற்றவாளிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி கடந்த 2017-இல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா். ஆனால், அந்த மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பா் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ‘நிா்பயா’வை, 6 போ் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதே டிசம்பா் மாதம் 29-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.

இக்கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவா் சிறாா் ஆவாா். சீா்திருத்த இல்லத்தில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த அவா், பின்னா் விடுவிக்கப்பட்டாா். மீதமுள்ள 5 பேரில் ராம் சிங் என்பவா் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டாா். இதர நால்வருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024