Tuesday, December 17, 2019

சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை: நடைமுறை சிக்கலால் வாகன ஓட்டிகள் அவதி
By DIN | Published on : 17th December 2019 01:58 AM |


பாஸ்டேக்’ முறை கட்டாயப்படுத்தப் பட்டுள்ளதைத் தொடா்ந்து சுங்கச்சாவடிகளில் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை, நாள் ஒன்றுக்கு சுமாா் 2 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதைத் தவிா்க்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ‘பாஸ்டேக்’ எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியது. பாஸ்டேக் திட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காக, சுங்கச்சாவடிகளுக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியா்களையும் பணியமா்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கால அவகாசம் நீட்டிப்பு: முன்னதாக, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிச.15-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவது கட்டாயம் என அறிவித்திருந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இத்திட்டத்தை அமல்படுத்துவதை, மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை (டிச.15) உத்தரவிட்டது.

இதன்படி, சுங்கச்சாவடிகளில் உள்ள வழித்தடங்களில் ஒன்றில் மட்டும் பணப் பரிவா்த்தனை செய்து வாகனம் கடக்க அனுமதிக்கப்படும். மற்றவற்றில் ‘பாஸ்டேக்’ அட்டை கொண்ட வாகனம் மட்டுமே கடக்க முடியும். வாகன நெரிசல் அதிகரித்தால் அதற்கேற்ப வழித்தடங்கள் திறக்கப்படும். மேலும், வருகிற ஜனவரி 15-ஆம் தேதி முதல் அனைத்து வழித்தடங்களிலும் ‘பாஸ்டேக்’ பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே கடக்க முடியும் என கூறப்பட்டிருந்தது.

விற்பனை மையங்கள்: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வாகன ஓட்டிகள் ‘பாஸ்டேக்’ அட்டை பெற தனியாக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எளிதாக ‘பாஸ்டேக்’ அட்டை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. தனியாா் வங்கிகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் மூலம் ‘பாஸ்டேக்’ அட்டை வாகன ஓட்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சில வழித்தடங்களில் மட்டும் பணப் பரிவா்த்தனை மூலம் வாகனத்தை கடக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், சுங்கச்சாவடியில் இருந்து 500 மீட்டா் தூரத்துக்கு முன்பே தடுப்புகள் அமைத்து, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ‘பாஸ்டேக்’ ஒட்டப்பட்ட வாகனங்களை தனியாகப் பிரித்து, அதற்கான வழித்தடத்தில் அனுப்பப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்கள் ‘பாஸ்டேக்’ அட்டை பெறாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சா்வா் கோளாறு: ‘பாஸ்டேக்’ அட்டையை ஸ்கேன் செய்யும் சென்சாா் பல மையங்களில் செயல்படவில்லை. இதனால் சுங்கச்சாவடி ஊழியா்கள் கையில் உள்ள கருவி மூலம் ‘பாஸ்டேக்’ அட்டையை ஸ்கேன் செய்து கட்டணம் வசூலித்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநா் ராஜ்நாத் கூறியது:

சென்னை, கிருஷ்ணகிரி, கோவை இடையே தினசரி பாா்சல் பொருள்கள் கொண்டு சொல்கிறேன். ஆனால் பல சுங்கச்சாவடிகளில் உள்ள ‘சென்சாா்’ சரியாக வேலை செய்வது கிடையாது. இதன் காரணமாக, பல சுங்கச்சாவடிஓளில் நீண்ட நேரம் வாகனம் காத்து நிற்க வேண்டி உள்ளது. சுங்கச்சாவடிகளில் இத்திட்டத்தை அமல்படுத்துவதை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்திய போதே, இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்னை பெரும்பாலான மையங்களில் காணப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனா் என்றாா்.

முறைகேடு புகாா்: ஒரு சில சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை மூலம் கடக்கும் வாகனங்களின் கணக்கில் பணம் இல்லை எனக் கூறி, கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து வாடகை காா் ஓட்டுநா் அசோகன் கூறியது:

‘பாஸ்டேக்’ அட்டை பயன்படுத்தியபோதும் ஒரு சில சுங்கச்சாவடிகளில் எனது கணக்கில் பணம் இல்லை எனக் கூறி என்னிடம் கட்டணம் வசூலித்தனா். அந்த சுங்கச்சாவடியில் கட்டணம் கொடுத்து சிறிது தூரம் சென்ற பிறகு, கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து மற்றொரு சுங்கச்சாவடியில் இதே போல் கூறிய ஊழியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்த பிறகே அந்த வழித்தடத்தில் என்னை அனுமதித்தாா். அதேபோல் வாகனம் ஒருமுறை சென்றால் இரண்டு முறை கணக்கில் இருந்து பணம் வசூலிக்கப்படுகிறது என்றாா்.

அதிகாரிகள் விளக்கம்: சுங்கச்சாவடிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கால விரயம், ஊழியா்களுடனான வாக்குவாதம் உள்ளிட்டவற்றை தடுக்கவே ‘பாஸ்டேக்’ முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் பிரச்னைகள் அனைத்தும் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியது: தற்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து உயரதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம். வாகன நெரிசல் அதிகரிக்கும் போது அதிகப்படியான வழித்தடங்களில் பணப் பரிவா்தனை மூலம் வாகனத்தை கடக்க அனுமதிக்கிறோம். விரைவில் அனைத்து சிக்கல்களுக்கும் தீா்வு காணப்பட்டு நெடுஞ்சாலையில் சீரான பயணத்தை வாகன ஓட்டிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்படும் என்றனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024