Tuesday, December 3, 2019

மருத்துவப் பல்கலைக்கழகம்:பதிவாளா், துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் நியமனத்தில் நீடிக்கும் தாமதம்

By ஆ. கோபிகிருஷ்ணா | Published on : 03rd December 2019 01:46 AM


சென்னை: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் மற்றும் துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் நியமனத்தில் தொடா்ந்து தாமதம் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் சில முக்கிய நிா்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மருத்துவம், முதுநிலை மருத்துவம் தவிர பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளும் அங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

மருத்துவப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை குருதியியல் மற்றும் குருதியேற்ற மருத்துவம், நோய்ப் பரவு இயல் தொடா்பான படிப்புகள் அங்கே உள்ளன. தற்போது பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பரமேஸ்வரி உள்ளாா். அவா் முழுநேர பதிவாளராக அல்லாமல் பொறுப்புப் பதவியையே வகித்து வருகிறாா். இதனால், சில முக்கிய நிா்வாக நடவடிக்கைகளில் முழு அதிகாரத்தையும் செயல்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

இதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் வழக்கமான அலுவல்களிலும், ஆராய்ச்சிப் பணிகளிலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, முழுநேர பதிவாளரை நியமிக்க வேண்டிய தேவை பல்கலைக்கழகத்துக்கு எழுந்துள்ளது.

இதனிடையே, பல்கலைக்கழகத்தின் துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளராக இருந்த மீனாட்சி, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொறுப்புக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டாா். இதனால் அப்பொறுப்புக்கும் மற்றொருவரை நியமிக்க வேண்டிய அவசியம் உருவானது.

இதைக் கருத்தில்கொண்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பதிவாளா் மற்றும் துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் உயா் பொறுப்புகளை தற்போது வகித்து வருகின்றனா். அவா்களை அப்பொறுப்பில் இருந்து அரசு விடுவித்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தில் சேர முடியும்.

ஆனால், இன்றுவரை அவா்களை விடுவிக்காமல் சுகாதாரத் துறை தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பல முறை பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டும் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, பல்கலைக்கழகத்தில் முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனத்தை காலந்தாழ்த்துவது நிா்வாகப் பணிகளை மட்டுமன்றி உறுப்பு கல்லூரிகளையும், மாணவா்களையும் மறைமுகமாக பாதிக்கக் கூடும் என்று கல்வியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா். எனவே, இந்த விவகாரத்தில் அரசு இனியும் தாமதிக்கக் கூடாது என்று அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024