Tuesday, December 3, 2019

பொங்கல் பரிசு எப்போது: அதிகாரிகளை திணறடிக்கும் மக்கள்!

Updated : டிச 03, 2019 00:45 | Added : டிச 02, 2019 22:26

சென்னை: அதிகாரிகளை மொபைல் போனில் அழைத்து, 'பொங்கல் பரிசு தொகுப்பை எப்போது தருவீர்கள்' எனக் கேட்டு, ரேஷன் கார்டுதாரர்கள் திணறடித்து வருகின்றனர்.

தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், 1,000 ரூபாய் ரொக்கத்துடன், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம் மற்றும் கரும்பு அடங்கியபரிசு தொகுப்பை அறிவித்தது.இவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., சில தினங்களுக்கு முன், சென்னையில் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, பலரும் ரேஷன் கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசு வழங்கும்படி, ஊழியர்களிடம் கேட்கின்றனர். அதற்கு அவர்கள், அதிகாரிகளின் மொபைல் போன் எண்களை வழங்கி, கேட்கும்படி கூறுகின்றனர்.இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முந்திரி, திராட்சை உட்பட, இன்னும் எந்த பொருளையும் வாங்கவில்லை; கரும்பும் விற்பனைக்கு வரவில்லை. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாகவே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது, முன்கூட்டியே துவங்கப்பட்டது.

சில தினங்களில், அவை, ரேஷன் கடைகளில் வழங்கப்படும். ஆனால், 'பொங்கல் பரிசு கொடுங்க...' எனக் கேட்டு, ரேஷன் கார்டுதாரர்கள் கடைகளுக்கு வருகின்றனர்.ஊதிய உயர்வு வழங்காததால், அரசின் மீது, ரேஷன் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களிடம், உணவு வழங்கல் துறை அதிகாரிகள், கூட்டுறவு துணை மற்றும் இணை பதிவாளர்களின் மொபைல் போன் எண்களை கொடுத்து, 'அதிகாரிகளிடம் கேளுங்கள்' எனக்கூறி, தப்பி விடுகின்றனர்.

ரேஷன் கார்டுதாரர்கள், அதிகாரிகளை மொபைல் போனில் அழைத்து, 'பொங்கல் பரிசை எப்போ தருவீங்க...' எனக் கேட்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு, 10 பேர் வரை கேட்பதால், அதிகாரிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024