சர்க்கரை கார்டுகளுக்கு அரிசி ஒதுக்கப்படுமா?
Updated : டிச 08, 2019 01:34 | Added : டிச 08, 2019 01:26
'சர்க்கரை கார்டுகளுக்கு வழங்க தேவையான, அரிசி வரவில்லை' என, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுகளுக்கு, இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும்; சர்க்கரை கார்டுகளுக்கு, அரிசி தவிர்த்த மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. ரேஷனில் வழங்க, மாதம், 3.13 லட்சம் டன் அரிசி தேவை. அதில், 1.93 லட்சம் டன் அரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கிலோ, 3 ரூபாய் விலையில், இந்திய உணவு கழகத்திடம் இருந்து வாங்குகிறது.
மேலும், கிலோ, 8.30 ரூபாய் விலையில், 1 லட்சம் டன்னும்; மீதி அரிசி, வெளிச்சந்தை விலையில், கிலோ, 25 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது. தற்போது, சர்க்கரை கார்டுதாரர்களும் அரிசி வழங்கப்பட உள்ளது. அதன்படி, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுதாரர்களில், 4.50 லட்சம் பேர், அரிசி கார்டுகளுக்கு மாறினர். அவர்களுக்கு வழங்க, மாதம், 20 ஆயிரத்து, 390 டன் அரிசி கூடுதலாக தேவை. அதற்காக அரசுக்கு, 50.41 கோடி ரூபாய் செலவாகும். இம்மாதம், 4ம் தேதி முதல் அரிசிக்கு மாறிய, சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:ஒவ்வொரு கடையிலும் உள்ள, மொத்த அரிசி கார்டுகளுக்கும், அரிசி வழங்குவதில்லை. உதாரணமாக, 100 அரிசி கார்டுகள் இருந்தால், 70க்கு மட்டும் தான், அரிசி அனுப்பப்படுகிறது. இம்மாதமும், அதே அளவு தான், அரிசி அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது, சர்க்கரை கார்டுகளுக்கும் அரிசி வழங்குமாறு, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அதற்கு தேவையான அரிசியை வழங்கவில்லை. இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் தெரிவித்தால், 'அடுத்த மாதம் கூடுதலாக தரப்படும்' என்கின்றனர். இதனால், அரிசி கார்டுதாரர்களுக்கும், குறைந்த அளவே அரிசி வழங்கும் நிலைஉள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment