இன்றைய இந்தியா, இளைஞர் பட்டாளத்தால் நிரம்பி ததும்பிக் கொண்டிருக்கிறது. உலகில் உள்ள மொத்த இளைஞர்களில் ஐந்தில் ஒருபங்கு இந்தியாவில்தான் இருக்கிறார்கள். கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துகொண்டே போய்க் கொண்டி ருக்கிறது. தற்போதைய நிலையில் 11 கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்கால இளைஞர் சமுதாயத்துக்கு படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான நிலையை உருவாக்கவேண்டியது அரசாங்கங்களின் கடமையாகும். இப்போதெல்லாம் மத்திய அரசாங்க பணிகளுக்கு விண்ணப்பம் அனுப்புபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. 1,300 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழுதியுள்ளனர். இதுபோல, ரெயில்வேயில் ஒருசில ஆயிரம் கடைநிலை ஊழியர் பணிக்கு, லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதுகிறார்கள். ஆக, எந்த பிரிவுக்கான வேலை என்றாலும் கடுமையான போட்டி நிலவும் சூழ்நிலை இருக்கிறது. ஆக, இவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது மத்திய அரசாங்கத்துக்கு மிகவும் கஷ்டமான நிலைதான். தற்போது ரெயில்வே, ராணுவம், போலீஸ் போன்ற துறைகள் உள்பட மத்திய அரசாங்க பணிகளில் ஏறத்தாழ 50 லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில் ரெயில்வேயில் மட்டும் 14 லட்சம் பணியிடங்கள் இருக்கின்றன. மத்திய அரசு பணிகளில் 10 லட்சத்து 26 ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள்.
மத்திய அரசாங்க பணியில் சராசரியாக 21 வயது முதல் சேரமுடியும். 1962–க்கு முன்பு இவர்களின் ஓய்வுபெறும் வயது 55 ஆக இருந்தது. 55 வயது ஆனால் நீங்கள் ‘ரிடையர்’ ஆகிவிட்டீர்கள் என்று முத்திரை குத்தி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த நாள்வரை மாதசம்பளம் வாங்கிவந்த அவர்கள் அதன்பிறகு பென்ஷனை வாங்கித்தான் தங்கள் காலத்தைக் கழிக்கவேண்டும்.
55 வயதிலேயே வீட்டுக்கு போய் என்ன பயன்? அவர்களால் உழைக்க முடியுமே, அவர்களின் பணி அனுபவம் வீணாகிறதே என்ற கோரிக்கைகளுக்கு பிறகு, 1962–ல் மத்திய அரசாங்க பணியாளர்களின் வயது 58 ஆக உயர்த்தப்பட்டது. 1998–ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் இப்போதுள்ள மருத்துவ முன்னேற்றத்தில் மனிதனின் வாழ்நாள் உயர்ந்துவிட்டது, எனவே ஓய்வு பெறும் வயதை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் 60 ஆக உயர்த்தப்பட்டது. எங்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறதே என்று அப்போதே பலத்த எதிர்ப்பு அலை இளைஞர்களிடம் இருந்து கிளம்பியது. எப்போதுமே மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு இணையாக சம்பள உயர்வு, அக விலைப்படி உயர்வு போன்ற சலுகைகளை மாநில அரசு ஊழியர் களுக்கும் அளித்துவரும் தமிழக அரசு போன்ற மாநில அரசுகள், இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கத்தைப் பின்பற்றவில்லை. மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு
பெறும் வயது 58 ஆகத்தான் இருக்கிறது.
தற்போது திட்டம் சாராத செலவுகளை குறைக்க வேண்டும், அரசாங்க பணிகளில் நிபுணத்துவம், தகவல் தொழில்நுட்பம், இளம் ரத்தத்தை புகுத்தவேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்துவரும் மத்திய அரசாங்கம், மத்திய அரசாங்க ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60–லிருந்து மீண்டும் 58 ஆக குறைக்க திட்டமிட்டு வருகிறது. 6–வது சம்பளக்குழு பரிந்துரைக்கு பிறகு கடந்த ஆண்டு சம்பளமாக மட்டும் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்றவர்களுக்கான பென்ஷன் மட்டும் இந்த ஆண்டில் வழங்குவதற்காக ரூ.81 ஆயிரத்து 983 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 7–வது சம்பளகுழு பரிந்துரையில் இன்னும் அபரிமிதமான சம்பள உயர்வை எதிர்பார்க்கும்போது, அந்த நிதிச் சுமையை அரசாங்கத்தால் தாங்கமுடியுமா? என்ற நிலையும் உள்ளது. இளைஞர் களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும். அதற்கும் வாய்ப்பு வேண்டும். நாட்டில் தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துள்ளநிலையில், குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச நிர்வாகம் என்ற வகையில் இளைஞர்களின் திறமையையும், நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி, சிறந்த நிர்வாகத்தை உருவாக்க இந்த முயற்சியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment