Monday, March 16, 2015

'பாஸ்வேர்டு இனி தேவையில்லை!'



இணைய சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்த பாஸ்வேர்டு முக்கியமாக இருந்தாலும் பாஸ்வேர்டை மறந்துவிடுவது என்பது பலருக்கும் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இந்நிலையில் பாஸ்வேர்டை இனி நினைவில் கொள்ள தேவையில்லாத வகையில் புதுமையான தீர்வை யாஹு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முன்னோடி இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹு, ஆன் டிமாண்ட் எனும் பெயரில் பாஸ்வேர்டுக்கான இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் சவுத் பை சவுத்வெஸ்ட் தொழில்நுட்ப மாநாட்டில் யாஹூ இதை அறிமுகம் செய்தது.
இந்த முறைப்படி யாஹு மெயில் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துபவர்கள், இனி பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டாம்.

இந்த முறைப்படி யாஹு சேவைக்குள் ஒருவர் நுழைய முற்படும்போது, வழக்கம் போல பாஸ்வேர்டு டைப் செய்ய வேண்டும். அப்போது செட்டிங் அமைப்பில் ஆன் டிமாண்ட் பாஸ்வேர்டு அம்சத்தை தேர்வு செய்து உங்கள் போன் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு அடுத்ததாக எப்போது யாஹு சேவைக்குள் நுழைய விரும்பினாலும் பாஸ்வேர்டு கட்டத்தில் ‘ என் பாஸ்வேர்டை அனுப்புக” எனும் பட்டன் இருக்கும். அதில் கிளிக் செய்தால் நான்கு எழுத்து பாஸ்வேர்டு போனுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஒவ்வொரு முறையும் இதே போலவே பாஸ்வேர்டை போனில் பெற்று சேவைகளை இயக்கலாம்.

மூல பாஸ்வேர்டை நினைவில் வைத்துக்கொள்ளும் அவசியமும் இல்லை, அதை மறந்துவிட்டு தவிக்கும் பிரச்னையும் இல்லை.

தற்போது பழக்கத்தில் உள்ள 'டு வே ஆத்தண்டிகேஷன்' என்று சொல்லப்படும் இரு அடுக்கு பாதுகாப்பு முறையை போலவே இது அமைந்திருந்தாலும் முக்கிய வேறுபாடு இருக்கிறது. இரண்டு அடுக்கு முறையில் செல்போண் எண்ணை பதிவு செய்த பிறகு ஒவ்வொரு முறை பாஸ்வேர்டை டைப் செய்த பிறகும் போனுக்கு ஒரு குறியீடு அனுப்பபடும் . அதை டைப் செய்தால்தான் உள்ளே நுழைய முடியும்.

பாஸ்வேர்டு களவு போனால் கூட செல்போன் கையில் இருந்தால் மட்டுமே சேவைகளை பயன்படுத்த முடியும் என்பதால் இந்த முறை பாதுகாப்பானதாக சொல்லப்படுகிறது.

ஜிமெயில் போன்றவற்றில் இந்த இரண்டு அடுக்கு பாதுகாப்பு வசதி இருக்கிறது.

யாஹூ அறிமுகம் செய்துள்ள புதிய முறையில், ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டை முதலில் டைப் செய்யும் வசதியை நீக்கியுள்ளது. போனில் அனுப்பும் பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.

பொதுவாக போன் பயனாளிகளிடமே இருக்கும் என்பதால் இது போன்ற முறைகள் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. பாஸ்வேர்டுகளை தேவையில்லாமல் ஆக்குவதில் இது முதல் படி என்று யாஹூ நிறுவன அதிகாரி டைலன் கேசி, இந்த சேவையை அறிமுகம் செய்து கூறியிருக்கிறார்.

இணைய உலகில் ஹாக்கிங் மற்றும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் பூட்டுகளில் ஒன்றாக கருதப்படும் பாஸ்வேர்டை, மேலும் வலுவாக்கும் வழிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறனர். இந்த ஆய்வு தொடர்பான புதிய பலன்களில் ஒன்றாக யாஹூவின் ஆன் டிமாண்ட் பாஸ்வேர்ட் அமைகிறது. இந்த முறை பயனாளிகளுக்கு எளிதாக இருப்பதுடன், அவர்கள் பயன்படுத்தும் தகவல்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் யாஹு தெரிவித்துள்ளது.

ஆனால் நடைமுறையில் இந்த முறை எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என பார்க்க வேண்டும். கொத்து கொத்தாக பாஸ்வேர்டு களவாடப்பட்டதாக வெளியாகும் செய்திகளை குறைக்க இது வழிசெய்தால் இணையவாசிகளுக்கு மகிழ்ச்சிதான்.

- சைபர்சிம்மன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024