Saturday, March 21, 2015

சரியான இலக்கு!

Dinamani

அனைவரும் எதிர்பார்த்த கருப்புப் பணத்தைக் கண்டறிந்து வரிஏய்ப்பைத் தடுப்பது தொடர்பான மசோதா மக்களவையில் மார்ச் 20-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த "வெளிப்படுத்தாத அயல்நாட்டு வருவாய் மற்றும் சொத்து (வரி விதிப்பு) மசோதா'வுக்கு எந்த எதிர்க்கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்காது. ஏனென்றால், கருப்புப் பணத்துக்கு ஆதரவானவர்கள் என்று அம்பலப்படுவதற்கு எந்த அரசியல் கட்சியும் விரும்பாது.

இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது, வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்து தொடர்பான வரி ஏய்ப்புகள் மீது இந்திய வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படாது. இந்த புதிய சட்டத்தின்படியே நடவடிக்கைகள் அமையும். வெளிநாடுகளில் சொத்து சேர்த்து, அதை அரசுக்குத் தெரியாமல் மறைத்திருப்போருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை, 3 மடங்கு வரி என்று கடுமையான தண்டனைகள் இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கின்றன.

இருப்பினும், ஒரு முறை மன்னிப்பு வழங்கும் சிறுகால இடைவெளி இந்த மசோதாவில் இடம் பெற்றிருக்கிறது. கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் சேர்த்து வைத்திருப்போர், அதை முடிந்த மட்டும் இந்தியாவுக்கு சட்டப்படியாகக் கொண்டுவந்துவிடுவதற்கான ஒருவழிப் பாதையாக இந்த ஒரு முறை மன்னிப்பு அமைந்துவிட வாய்ப்புகள் ஏராளம் உள்ளன. இது நியாயத்துடன் சட்டத்துக்கு கட்டுப்பட்டு இருப்போரைக் கேலி செய்வதாக அமைந்துவிடும்.

வெளிநாடுகளில் சொத்து அல்லது வைப்புத்தொகை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வட்டி, வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குதாரராக இருத்தல் அல்லது பங்குகளை வாங்கியிருத்தல் போன்ற எந்த ஒரு செயலாக இருந்தாலும் அது குறித்து வருமான வரி படிவத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அவ்வாறு குறிப்பிடாமல், தவறுதலாக விடுபட்டதாக கூறினாலும்கூட, குறைந்தபட்சம் 7 ஆண்டு காலம் சிறை உண்டு. ஆகவே, நிச்சயமாக இந்தச் சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் கருப்புப் பணம் சேமிப்போர் எண்ணிக்கை, முற்றிலுமாக இல்லாவிட்டாலும் கணிசமாகக் குறைந்துவிடும்.

இத்தகைய வரி ஏய்ப்பில் சிக்கிய நபர்கள் பிரச்னை தீர்வுக் குழுமத்தை (செட்டில்மென்ட் கமிஷன்) அணுக முடியாது என்பதாலும், இன்னொருவரின் வருமான வரி தாக்கல் படிவத்தில் இந்த வருவாய் அல்லது சொத்துகளைக் காட்டும் நடைமுறைகளும் குற்றமாகக் கருதப்பட்டு, இதற்கான தண்டனை இருவருக்குமே கிடைக்கும் என்பதாலும், வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்குவதில் இனிமேல் இந்தியர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

கருப்புப் பணம் அதிகமாக வெளியே கொண்டு செல்லப்படும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் ரூ.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் ரூ.28 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளியேறி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டாலும், தற்போது 1,195 பேர் கணக்கில் உள்ள ரூ.25,000 கோடி கருப்புப் பணம் மட்டுமே தெரிய வந்திருக்கிறது.

அப்படியானால் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், வெளியே கொண்டு செல்லப்பட்ட கருப்புப் பணத்தின் பெரும் பகுதி, மீண்டும் இந்தியாவுக்குள் வந்து, வெள்ளைப் பணமாக மாறிவிட்டது என்பதுதான் இதற்குப் பொருள். இனிவரும் காலங்களில் இத்தகைய வருவாய் இழப்பை இந்தியா சந்திக்காது என்பது உறுதி.

இந்தச் சட்டம், வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர், தொழில் புரிவோர், வெளிநாடுகளில் வேலை செய்வோர் ஆகியோரை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் இன்னும் தெளிவாகாமல் இருக்கின்றன.

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இந்தியாவில் வந்து குவியும் பணத்தின் பெரும் பகுதி பொய்க்கணக்கு காட்டப்பட்டு, கருப்புப் பணமாக மாறி உலா வருவதை இந்தச் சட்டம் எவ்வாறு தடுக்கப் போகிறது? பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் தொழில் அனுமதி அளிக்கப்படும்போதும், கூட்டுத் தொழில் நடத்த அனுமதிக்கும்போதும் கையூட்டாகப் பெருந்தொகை பெறப்பட்டு அவை வெளிநாடுகளில் தேக்கி வைக்கப்படுகிறதே, அதை இந்த மசோதா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

மேலே எழுப்பி இருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் மசோதாவில் சரியான பதில் இல்லை. இதைக் கேட்டு, தெளிவான விளக்கம் பெற வேண்டியவர்கள் எதிர்க்கட்சியினர்தான்.

இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது பணச் சலவைத் தடுப்புச் சட்டத்திலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று அரசு தெரிவித்திருப்பதால், இத்தகைய புறவாசல்களையும் அரசு கவனத்தில் கொண்டிருக்கிறது என்றும், இதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் அமையும் என்றும் நம்பலாம்.

அசையா சொத்துகள் தொடர்பான பணப் பரிவர்த்தனையில் ரொக்கத் தொகை ரூ.20,000-க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்ற ஒரு திருத்தமும் இந்தப் புதிய மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இதை எல்லாவிதமான வணிக வர்த்தகங்களுக்கும் பொருந்துவதாகச் செய்யலாம்.

இந்தியாவைப் பொருத்தவரை, வங்கிப் பரிவர்த்தனையைவிட, நேரடிப் பணப் பரிவர்த்தனை மூலம்தான் வணிகமும், அன்றாட வரவு-செலவுகளும் நடைபெறுகின்றன. காசோலை, வங்கிகளின் பண அட்டை, கடன் அட்டை போன்றவற்றின் மூலம் மட்டுமே அனைத்து வரவு-செலவுகளும் மேலைநாட்டினரைப் போல நடைபெறும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே, கருப்புப் பணத்தை கணிசமாகக் கட்டுப்படுத்துவது சாத்தியம். இந்தியாவை அந்த இலக்கை நோக்கி நகர்த்துகிறது இந்த மசோதா!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024