Thursday, March 19, 2015

ஓடும் ரயிலில் அமைச்சரிடம் கொள்ளை; வெற்று துப்பாக்கியை வைத்திருந்த ரயில்வே போலீஸ்!

புதுடெல்லி: ஓடும் ரயிலில் அமைச்சரிடம் ஆயுதம் தாங்கிய கும்பல் கொள்ளையடித்த நிலையில், பாதுகாப்புக்கு நின்றிருந்த ரயில்வே போலீஸார் தோட்டா இல்லாத வெற்று துப்பாக்கியை வைத்திருந்ததால் கொள்ளையை தடுக்காமல் ஓட்டம் பிடித்த சம்பவம்  பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜபல்பூர் - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேச மாநில நிதியமைச்சர் ஜெயந்த் மாலையா, அவரது மனைவி மற்றும் ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மதுராவை கடந்தபோது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய 5 பேர் கும்பல் ஒன்று, அமைச்சர் அமர்ந்திருந்த கூபே கதவை படபடவென்று தட்டி உள்ளது. ஏதோ அவசரம் என்று கருதிய அமைச்சர் ஜெயந்த உடனடியாக கதவை திறந்துள்ளார். உடனே 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் உள்ளே புகுந்துகொள்ள, இன்னொரு 5 பேர் கொண்ட ஆயுத கும்பல் வெளியே காவலுக்கு நின்றுள்ளனர். 

இதனையடுத்து உள்ளே புகுந்த கும்பல், துப்பாக்கி முனையில் அமைச்சர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரிடம் இருந்த நகைகள், பணம் உள்ளிட்ட விலை மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தது. பின்னர் மேலும் பல பயணிகளிடமும் இதேப்போன்று கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. 

இத்தகவலை அமைச்சரின் மனைவி சுதா மாலையா  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ரயிலில் இருந்த ரயில்வே போலீஸார் யாரும் கொள்ளையை தடுக்கவோ, கொள்ளையர்களை பிடிக்கவோ முயற்சிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து பின்னர் அவர்களிடம் கேட்டபோது, தங்களிடம் வெற்று துப்பாக்கிதான் இருந்ததாகவும், தோட்டாக்கள் இல்லை என்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தெரிவித்ததாக அமைச்சர் மாலையா தெரிவித்தார். 

இந்நிலையில் ரயில் டெல்லி வந்ததும், நேராக நாடாளுமன்றத்திற்கு சென்ற அமைச்சர் மாலையா, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் செய்தார். மேலும் நாடாளுமன்ற கூட்டம் அப்போது நடந்துகொண்டிருந்ததால் மக்களவையில் இதுகுறித்து உறுப்பினர் ஒருவர் பிரச்னை எழுப்பினார். 

இதனையடுத்து கொள்ளை நடந்த ரயிலில் பணியில் இருந்த ரயில்வே போலீஸார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரயில்வே அமைச்சகம், உத்தரபிரதேச காவல்துறையிடமும் அறிக்கை கேட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024