Thursday, March 5, 2015

இப்படி ஒரு மன உணர்வா?

logo

கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16–ந் தேதி டெல்லியில் நடந்த 23 வயது மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் கற்பழித்து, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட துடிதுடிப்பு இன்னும் மாறவில்லை. அதன் எதிரொலியாகத்தான் நாடு முழுவதும் இன்று பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2013–ம் ஆண்டு பெண்கள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி அறிவிக்கப்பட்டு, அதற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதன்தொடர்ச்சியாக இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூடுதலாக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த படுபாதகத்தை செய்த 6 பேர்களில் ராம்சிங் என்பவன் ஜெயிலிலேயே தற்கொலை செய்துகொண்டான். அக்ஷய் தாகூர், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, இப்போது அப்பீலில் இருக்கிறது. ஒரு குற்றவாளி 17 வயதுடையவன் என்பதால் இப்போது 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த நிலையில், அந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜெயிலில் இருக்கும் சம்பவம் நடந்த அந்த பஸ் டிரைவர் முகேஷ் சிங்கை, உலக புகழ்பெற்ற பி.பி.சி. நிறுவனம் பேட்டி எடுத்து, வருகிற 8–ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஒரு டாகுமெண்டரி படத்தை திரையிட திட்டமிட்டுள்ளது. இந்த பேட்டியில் கொடியவன் முகேஷ் சிங் நெஞ்சமெல்லாம் பதறும் அளவுக்கு சில கருத்துக்களை கூறியிருக்கிறான். எந்த பெண்ணாவது கற்பழிக்கப்பட்டால் அதை எதிர்த்து போராடக்கூடாது, அமைதியாக இருந்து அனுமதித்துவிட வேண்டும். அப்படி இருந்தால் கற்பழிக்கப்பட்ட பிறகு, அவள் விட்டுவிடப்படுவாள், அவளுடன் இருக்கும் பையன்தான் அடிபடுவான், எந்த நல்ல பெண்ணும் இரவு 9 மணிக்குமேல் வெளியே சுற்ற மாட்டாள், கற்பழித்தவனைவிட அந்த பெண்தான் கற்பழிப்புக்கு பொறுப்பு, ஆணும்–பெண்ணும் சமமல்ல, பெண் என்பவள் வீட்டை பார்த்துக்கொண்டு, வீட்டு வேலை செய்யவேண்டுமே தவிர, இரவு நேரங்களில் டிஸ்கோ, பார் என்று சென்றுகொண்டும் தவறான காரியங்களை செய்துகொண்டும், தவறான உடைகளை அணிந்துகொண்டும் இருக்கக்கூடாது, என்னுடைய கண்ணோட்டத்தில் 20 சதவீத பெண்கள் நல்லவர்கள் என்று கூறியிருக்கிறான். இதோடு அவன் விட்டுவிடவில்லை. இப்போது எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை இனி கற்பழித்துவிட்டு கொலை செய்வதை அதிகரித்துவிடும், இப்போது கற்பழிப்பவர்கள், கற்பழிப்பு முடிந்தவுடன், பொதுவாக அவளை விட்டுவிடுவோம், வெளியில் சொல்ல மாட்டாள் என்று கூறி விட்டுவிடுவார்கள், இனி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்று கொன்றுவிடுவார்கள், நிர்பயா சம்பவம் ஒரு விபத்து தான், இரவில் வெகுநேரம் கழித்து இப்படி சுற்றக்கூடாது என்ற ஒருபாடத்தை அவளுக்கும், அவளுடைய ஆண் நண்பருக்கும் புகட்டவே இவ்வாறு கற்பழித்து, அடித்தோம் என்று திருவாய் மலர்ந்து இருக்கிறான்.

இந்த பேட்டியின் முழு விவரமுமே 8–ந் தேதி தான் தெரியும் என்றாலும், இதுதொடர்பாக இப்போது வந்துள்ள தகவல்களைப் பார்க்கும் போது, இந்த கொடூர குற்றத்தை செய்தவர்கள் எத்தகைய மனநிலைக்கு ஆட்பட்டவர்களாக இருந்து இருக்கிறார்கள், எப்படி பின்தங்கிய அறிவாற்றலோடு இருந்து இருக்கிறார்கள், இப்படிப்பட்ட மன ஓட்டத்தில் உள்ளவர்கள் இவர்களைப் போல இருக்கிறார்களே என்பதை எண்ணும் போது தான் வேதனையாக இருக்கிறது. இந்த மனநிலை நாட்டில் மாறவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024