இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…
இந்தியாவின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி எழுதிய நூலிலிருந்து…
லால் பகதூர் சாஸ்திரி நாட்டின் தலைமை அமைச்சராகப் (பிரதமராக) பொறுப்பேற்ற வரை அவரிடம் சொந்தமாக மகிழ்வுந்து இருந்ததில்லை. குழந்தைகளாகிய எனக்கும் எனது தம்பி தங்கைகளுக்கும் குடும்பத்திற்கென்று சொந்தமாக மகிழ்வுந்து ஒன்று வேண்டுமென்கிற ஆவல் எப்பொழுதும் இருந்துவந்தது. ஆனால், சாஸ்திரி அதற்கு ஏற்பளிக்கவில்லை. ஆகவே, அவர் தலைமை அமைச்சர் பொறுப் பேற்ற பின்னர் மகிழ்வுந்து சொந்தமாக வாங்கும் வேண்டுகோளை அவரிடம் முன்வைத்தேன்.
ஒரு நாள் மாலையில் அவர் என்னை அழைத்து மகிழ்வுந்து வாங்குவதென்று தீர்மானித்துவிட்டதாகத் தெரிவித்தார். நாங்கள் மெய்சிலிர்த்துப்போனோம். தனது பணியாளர் ஒருவரை அழைத்து தனது வங்கிக் கணக்கின் இருப்புத் தொகை குறித்தும் மகிழ்வுந்து ஒன்றின் விலை குறித்தும் அறிந்துவரச் சொன்னார். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ. 7000 இருந்தது. ஃபியட் நிறுவன வண்டி ஒன்றின் விலை ரூ. 12000.
இந்தியத் தலைமை அமைச்சருடைய வங்கி இருப்பு ரூ. 7000 மட்டுமே என்பதை அறிந்து திகைத்துப் போனோம். இருப்பினும் அவர் எங்களை ஏமாற்றவில்லை. இந்தியத் தலைமை அமைச்சரான அவர் பஞ்சாப் தேசிய வங்கியில் கடனுதவி பெறுவதற்கு மனுச்செய்தார். எங்களுக்காக ஒரு மகிழ்வுந்து வாங்கினார். ஓராண்டிற்குப் பின்னர் அவர் மரணமடைந்தார். வங்கிக் கடன் திரும்பச் செலுத்தப்படாமல் இருந்தது.
அரசு கடனைத் தள்ளுபடி செய்ய முன்வந்தபோதிலும் எனது தாயார் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். மாதந்தோறும் பெற்ற ஓய்வூதியத் தொகையிலிருந்து கடனை சாஸ்திரிஜி இறந்து மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்திவிட்டார். அந்த மகிழ்வுந்து வெறுமனே பயணிக்கும் வண்டி என்பதற்கும் மேலாக எனக்குப் பொருள் பொதிந்த ஒன்றாகத் தோன்றியதால் அதனைப் பயன்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். நான் என்றென்றைக்கும் எண்ணித் திளைக்கக் கூடிய மதிப்பீடுகளும் நினைவுகளும் அந்த வண்டியில் பொதிந்துள்ளன.
No comments:
Post a Comment