Monday, October 3, 2016


ஒருதலை காதலா? தறுதலை காதலா?

By மருத்துவர் ச. இராமதாசு | Last Updated on : 03rd October 2016 01:55 AM | அ+அ அ- |


கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்ச் சமூகம் பல்வேறு களங்களிலும் பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக வணிகமயமாகிவிட்ட கல்வி, வேலையில்லாத் திண்டாட்டம், திரைப்படம் மற்றும் கிரிக்கெட் போன்றவற்றை மையமாகக் கொண்டு இயங்குகின்ற பொழுதுபோக்கு மனப்பான்மை, தொழில்துறையிலும், வேளாண்மையிலும் அக்கறையே காட்டாத தொலைநோக்குப் பார்வை ஏதுமற்ற அரசுகள் போன்றவை நமது இன்றைய வீழ்ச்சி நிலைக்கான காரணங்களாக அமைந்தன. மிகவும் குறிப்பாக நமது தமிழ்ச் சமூகத்தின் வீழ்ச்சிக்குப் பெருங் காரணமாக அமைந்தது கட்டற்ற மது வணிகம்.
இளைஞர்களுக்கு மது போதையூட்ட தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காதல் போதையூட்டுவதற்கு திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் பெண்களைக் கேலி செய்து பகடிப் பாடல்களைப் பாடுவதற்கு, பாடல்கள் எழுதிப் பதிவு செய்யப்பட்டு சந்து பொந்துகளில் எல்லாம் கூட அவை பெரும் இரைச்சலோடு ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பொறுக்கியாகவே, போக்கிரியாகவோ இருந்து கொண்டு வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்ற எவன் ஒருவனும் அவன் பார்க்க நேருகின்ற எந்தப் பெண்ணையும் துரத்தித் துரத்திக் காதலிக்கலாம் என்கிற பொதுக் கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு வகையான சுய முன்னேற்றச் சிந்தனைகளை மனதிற் கொண்டே நமது தமிழ்நாட்டின் பெண் பிள்ளைகள் மிகவும் குறிப்பாக கிராம, பேரூர், நகரப் பகுதிகளின் பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய வண்ண வண்ணக் கனவுகளோடு தான், பெற்றோர்களும் அவர்களைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் ஒருதலைக்காதல் என்ற முகமூடியோடு அத்தகைய பெண்களைச் சுற்றிச் சுற்றி வருகின்ற தறுதலைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாணவிகளின் லட்சியங்களும், அந்த மாணவிகளைப் பெற்றவர்கள், தங்களது மகளைக் குறித்துக் காண்கின்ற எதிர்காலக் கனவுகளும் ஒரு பொருட்டாகத் தெரிவதேயில்லை.
தறுதலைக் காதலர்களின் நோக்கம் முழுவதும் காமக் குரூரமாகவும், காதல் என்ற பெயரில் பணம் பறிக்கிற கபடத்திட்டமாகவும் இருப்பதால் எத்தகைய இழிவான எல்லைக்கும் அவர்கள் செல்லத் துணிகிறார்கள், மிகவும் கொடூரமான வன்முறைகளால் அவர்கள் அடைய விரும்பிய பெண்களை கொலை செய்கிறார்கள்.
கொஞ்சமும் ஈவு இரக்கமின்றிப் பெண்பிள்ளைகளின் உயிர்களைப் பறிக்கின்ற இத்தகைய போக்கு, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் நிலைக்குலைய வைத்திருக்கிறது. மிகவும் குறிப்பாகப் பெண்களையும், அதிலும் குறிப்பாக படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் முன் வருகின்ற இளம் பெண்களையும் அச்சுறுத்தி நடுங்க வைப்பதாக மாறியிருக்கிறது.
இதன் விளைவாக நிகழ்காலத்தில் இளம் தலைமுறைப் பெண்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே தங்களை முடக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறுகின்றனர்.
இளம்பெண்கள், ஒருதலைக் காதல் தறுதலைகளால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக நேரும்போது, அதை அவர்கள் பெரும்பாலும் தங்கள் குடும்ப உறவுகளிடம் தெரிவிக்காமல் மனதுக்குள்ளேயே நினைத்து நினைத்துக் குமைந்து கொண்டு கிடக்கின்றனர்.
அப்படித் தெரிவித்தால் தங்களது படிப்பும், பணி வாய்ப்பும் துண்டிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க நேரிடும் என்று அவர்கள் எண்ணுவதே அதற்குக் காரணமாகும்.
எந்த நேரமும் தன்னையே பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கின்ற ஒரு தறுதலையை, ஒரு பெண் நிராகரித்தால் அந்த நிராகரிப்பை அந்தத் தறுதலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் அந்தப் பெண்ணைக் கொலை செய்து விடுகிறான்.
ஓர் ஆணும் பெண்ணும் பழக ஆரம்பித்த பின், அந்த ஆண் ஒரு கேடு கெட்ட தறுதலையாக இருப்பதை உணர்ந்துவிடுகின்ற அந்தப் பெண் அவன் வேண்டாம் என்று நிராகரிக்கும்போதும் அந்த பெண்ணை அவன் கொலை செய்து விடுகிறான். அதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டது தெரிந்துவிட்டால் அந்தப் பெண் அவளது பழைய தறுதலையால் உடனடியாகக் கொலை செய்யப்பட்டு விடுகிறாள்.
தன்னை எப்போதும் ஒருவன் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் காவல் நிலையத்திலோ தனது உறவுக்காரர்களிடமோ புகார் செய்தால், அப்போது அந்தத் தறுதலையின் கோபம் மேலும் அதிகமாகி விடுகிறது.
அந்தப் பெண் மீதும் தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு, பல்வேறு வகையான கேள்விகளுக்கும், அறிவுரைகளுக்கும், அவமானங்களுக்கும் அவள் ஆளாக்கப்படுகிறாள். தான் நம்பிய ஒரு தறுதலை தன்னை ஏமாற்றிச் சுகங்கண்டு விட்டு விலகிப் போகும்போதும் அந்த அவமானம் தாங்காமல் தன்னையே மாய்த்துக் கொண்டு அந்தப் பெண் இறந்து போகிறாள்.
ஆக தறுதலைக் காதலாக இருந்தாலும், இருதலைக் காதலாக இருந்தாலும் அதன் பொருட்டு பாதிக்கப்படுவோரும், கொலை செய்யப்படுவோரும் இளம் பெண்களே ஆவர்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டிப்பாளையத்தில் நவீனா என்ற 15 வயது பெண்ணை 30 வயது குடிகாரன் ஒருவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான். அவன் கடைந்தெடுத்த ஒரு போக்கிரி என்பது அவனது ஊராரும், காவல்துறை வட்டாரங்களும் அறிந்த உண்மை.
ஒருமுறை குடிபோதையில் அவன் ரயில் தண்டவாளத்தில் விழுந்துவிட ரயில் சக்கரங்களில் சிதைந்து அவனது வலது கையும், வலது காலும் துண்டிக்கப்பட்டு விட்டன. மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு அவன் வெளியே வந்தவுடன் அவனைச் சுற்றி வளைத்த ஒரு குழுவினர், அவன் காதலித்த பெண்ணின் சாதிக்காரர்கள் அந்தக் காதலனின் கையையும், காலையும் வெட்டி விட்டதாகக் கதைக் கட்டி அந்தக் கதையை ஊடகங்களுக்குக் கொடுத்து விட்டு காவல் நிலையத்திலும் அதையே புகாராகக் கொடுத்தனர்.
இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு தொலைக்காட்சியின் விவாத அரங்கில் அந்தக் காதலனை ஒரு கை ஒரு காலோடு அமர வைத்து சமூக ஆர்வலர்களையும் உடன் அமர வைத்துக் கொண்டு விவாத அரங்கை நடத்தினர்.
அந்த நிகழ்ச்சியைப் பார்த்த பலரும் அடடா இது என்ன கொடுமை இப்படியா சாதி வெறி பிடித்து காதலர்களைப் பிரிப்பது என்றெல்லாம் அநியாயத்துக்கு வருத்தப்பட்டார்கள். ஆனால் அந்த தொலைக்காட்சி நாடகத்திற்குப் பிறகான காவல்துறை விசாரணையிலும், மருத்துவ ஆவணங்களிலும், உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலும் அவன் குடித்துவிட்டு ரயிலில் விழுந்து தான் தன் கை, காலை இழந்தான் என்பது வெட்ட வெளிச்சமானது.
உண்மை என்னவென்று வெட்ட வெளிச்சமானபின், தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள், தாங்கள் நடத்திய அந்த நயவஞ்சக நாடகத்திற்கு மெல்லிய குரலில் வருத்தப்பட்டுக் கொண்டு அமைதியாகி விட்டனர். பல காதல் ஆதரவு நாடகங்களில் இப்படியெல்லாம் பொய்களும் புரட்டுகளும் கரைபுரண்டு ஓடியுள்ளன.
நீ எனக்கு வேண்டும். நான் உன்னை அடைந்தே தீருவேன். என்னைத் தவிர வேறு யாரும் உன்னை அடைய முடியாது என்றெல்லாம் ஒரு பெண்ணிடம் தொடர்ந்து வம்பு செய்து வருகின்ற ஒரு போக்கிரி, ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணைக் கொலையும் செய்து விடுகிறான்.
ஒரு பெண் தனக்குப் பிடிக்காதவனை நிராகரிக்கும் உரிமையற்றவளாகி உயிரை இழக்கிறாள் என்றால், இது சாதிப் பிரச்னையோ, காதல் பிரச்னையோ, ஒருதலைக் காதல் பிரச்னையோ, ஆண் - பெண் காதல் உரிமை பிரச்னையோ அல்ல.
இது முழுக்க முழுக்க ஒரு சமூகப் பிரச்னை. மகளிர் பாதுகாப்பினை கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்குகின்ற பிரச்னை. மகளிருக்கான கல்வி உரிமைகளையும், வேலை செய்யும் உரிமைகளையும் மறைமுகமாக அச்சுறுத்துகிற பிரச்னை.
இத்தகைய புரிதல்கள் ஏதும் இல்லாமல் போக்கிரிக் கும்பல்களை காதலன்களாகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிப் போகிறவர்களாகவும் சித்திரித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுவது என்பது நாகரிக சமூகத்துக்கும், பெண் இனத்துக்கும் செய்யப்படுகின்ற இழிவானதொரு இரண்டகமாகும்.
இத்தகைய இரண்டகர்களை முறியடித்து அம்பலப்படுத்த வேண்டியது மனச்சாட்சியுள்ள, பெண்களின் மேன்மையை விரும்புகின்ற அனைவரது உரிமையும் கடமையும் ஆகும்.
என்னை நிராகரிப்பவள், எனக்கு கிடைக்காமல் வேறு எவனுக்கோ கிடைக்கப் போகிறவள், இந்த உலகில் வாழவே கூடாது என்றெண்ணிக் கொலை செய்கின்ற, காதல் எனும் பெயரில் பெண்களை கடத்துகின்ற, காதல் கட்டப் பஞ்சாயத்துகளில் பணம் பறிக்கின்ற கும்பல்களுக்கு எப்படிப் பாடம் புகட்டப் போகிறீர்கள் என்று இளம்பெண்களின் கல்லறைகளில் இருந்து கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடை காண வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும்
இருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024