Monday, October 3, 2016


அதிக சப்தம் ஆபத்து

By இரா. இராஜாராம் | Last Updated on : 03rd October 2016 01:56 AM | அ+அ அ- |


மனித உடல் வியக்கத்தக்க ஒன்றாகும். ஐம்புலன்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை படைத்தது. நவீன கருவிகளை உயர்வாக எண்ணி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்குக்கூட அற்புதமான இயற்கையான உயிர் ஆற்றல் உடைய உடலை அதன் இடைவிடாத இயக்கத்தை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.
உடல் உறுப்புகள் பாதிப்படைந்தபின்பே அதன் அருமையையும், தேவையையும் உணர்ந்து பார்க்கின்றோம். சரிசெய்ய மருத்துவத்தின் மூலம் முயல்கிறோம். என்னதான் நவீன மருத்துவம் இருந்தாலும், இயற்கையாய் உள்ள அதன் செயல்பாடுகளை மீண்டும் முழுமையாக உண்டு பண்ணி விட முடியாது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக மனித சமுதாயம், இப்போதுள்ள நவீன கருவிகள் எதுவுமின்றி மனிதசக்தியால் இயங்கிடும் கருவிகளை மட்டுமே பயன்படுத்திச் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்புமின்றி இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வை வாழ்ந்திருக்கிறான்.
இன்று அறிவியலில் எவ்வளவோ வளர்ச்சியுற்றுப் பல்வகையான நவீன கருவிகள், போக்குவரத்து வசதிகள், நவீன மருத்துவம், போர்க்கருவிகள், சில நொடிகளில் உலகையே அழிக்கவல்ல அணு ஆயுதங்கள் எனப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்திட்டாலும் அதோடு சேர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், அதனால் உடலுக்கும், உள்ளத்திற்கும் பாதிப்புகளும் அதிகரித்தே வருகின்றன.
இதற்குச் சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை. மாசுபாடுகளைக் குறைக்க எவ்வளவோ முயற்சிகளை மத்திய } மாநில அரசுகள் எடுத்திட்டாலும் அதற்கு மக்களின் ஆதரவு அவசியம் தேவை.
சாலைகள் விரிவாக்கத்தின்போது அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டநிலையில், மரக்கன்றுகளை அதிக அளவில் ஆங்காங்கு நட்டு வளர்த்துப்பெரிதாக்கினால் காற்று மாசைக் குறைப்பது மட்டுமின்றி, ஒலிமாசையும் அவை கட்டுப்படுத்தும்.
சமீப காலமாக ஒலிமாசு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பித்தன்னை அடையாளப்படுத்தி வருகின்றன.
மனிதனும் அப்படி இருந்தவன்தான். நவீன கருவிகளின் வருகைக்குப் பின்பு இயல்பான ஒலி அளவைப் பன்மடங்கு பெருக்கி அதுவே பேரிரைச்சலாக மாறிவிட்டது.
தொழிற்சாலைகளிலிருந்து வரும் மிகையான ஒலி, வாகனங்கள் ஏற்படுத்தும் பேரிரைச்சல், ஒலிபெருக்கி பெட்டிகளின் அதிரடி ஓசை, விழா நாட்களில் வெடிகளை வெடித்துக் காற்றை மாசுபடுத்துவது, பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும் அதிக ஓசையுடன் ஒலிபரப்பப்படும் பாடல்கள், வீட்டில் அதிக ஒலியுடன் வைத்துப்பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமண மண்டபங்களில் அதிரவைக்கும் பாட்டுக் கச்சேரிகள், திரை அரங்குகளில் அதிரடி ஓசை என ஒலி மாசை உண்டு பண்ணும் காரணிகள் அதிகரித்து வருவது மனிதனின் நுட்பமான செவிப் புலனுக்குச் செய்யும் துரோகமாகும்.
ஒலி அளவு என்பது அதிகபட்சம் 50-லிருந்து 60 டெசிபெல் வரை இருக்கலாம், இந்த ஒலி அளவு வரை செவிகளுக்குக் கேடில்லை.
ஆனால் சாதாரண நாட்களிலேயே நகரங்களில் 90 - 95 டெசிபெல் ஒலிஅளவும், பொதுக்கூட்டங்கள், திருமணம், கோவில் திருவிழா போன்ற நேரங்களில் 110 - 120 டெசிபெல் என்ற ஒலி அளவும், தீபாவளி போன்ற விழாக்களின் போது அதிகளவில் பட்டாசுகளை வெடித்து காற்றையும் மாசுபடுத்தி, ஒலிமாசையும் உண்டுபண்ணும் அந்த ஒலிஅளவு 140 டெசிபெல்லையும் தாண்டி விடுகிறது.
இத்தகைய மிகை ஒலியெல்லாம் செவிப்பறையைத் தாக்கி அதிலிருந்து மூளைக்குச் செல்லும் அதிநுட்பமான ஒலி உணர்நரம்புகளைப் பாதித்துப் படிப்படியாக ஒலி உணர்திறன் குறைவது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, இன்சோம்னியா என்ற தூக்கமின்மை, குடல் அழற்சி, நரம்புத்தளர்ச்சி போன்ற உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திடும் ஒலிமாசைக் கட்டுப்படுத்திட சட்டங்கள் இருந்திடினும் அவை வெறும் பெயரளவுக்கே என்றாகிவிட்டன.
மக்களும் ஒலிமாசை உணர்ந்து குறைப்பதாகத் தெரியவில்லை. கடுமையான சட்டங்களை அரசு தீவிரமாகச் செயல்படுத்தினால் அன்றி இதனைக்கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.
அதிக ஒலி அளவைக் கேட்டுப் பழகியவர்களுக்கு மிகமெல்லிய நுட்பமான ஒலிகளைக் கேட்கும் திறன் இல்லாமல் போய்விடுகிறது. மிகை ஒலி ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே காதுக்காப்பானை வழங்கி ஒலிமாசிலிருந்து அவர்களைக் காத்திட வேண்டும்.
விமானநிலையங்கள், ரயில்வே பாதைகள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் ஒலிஅளவு மிக அதிகமாக இருக்கும். அதற்கருகில் மக்கள் குடியிருப்புகள் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அப்பகுதிகளில் அதிகளவில் மரங்களை நட்டுவளர்க்கலாம். அப்பகுதியில் குடியிருப்பதை மக்கள் தவிர்க்கவேண்டும். காடுகளில் வாழும் உயிரினங்கள் செயற்கையான ஒலியை முற்றிலும் வெறுக்கின்றன. அவை மிகநுட்பமான ஒலியையும், அதிர்வுகளையும் உணரும் ஆற்றல் படைத்தவை. சுனாமி ஏற்படுவதற்குச் சற்று முன்பாகவே அதனை உணர்ந்து அவை பாதுகாப்பான இடங்களுக்குச்சென்று விட்டன.
ஆனால் அதனை முன்னதாகவே உணர்த்திட எந்த நவீன கருவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சுனாமியால் மடிந்தனர். இயற்கையில் மிகையொலி என்பது இடியோசை மட்டும் தான். அதுவும் சில வினாடிகள் மட்டுமே நிகழ்வது.
பரபரப்பான இயந்திர உலகத்தில் வாழும் மனிதன், தன் நலன் கருதியாவது மாசுகளை உண்டுபண்ணும் எச்செயலிலும் ஈடுபடாமல், இயற்கையில் தான் பெற்ற உடல் என்னும் ஒப்பற்ற, உயிருள்ள கருவியை அலட்சியப்படுத்தாமல், மாசுகளிலிருந்து காத்து ஆரோக்கியமுடன் வாழ்வதே மிகச் சிறந்த செல்வமாகும், அறிவார்ந்த செயலுமாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024