3 வயது சிறுவனுக்கு மூளை புற்றுநோய் : அமெரிக்க சிகிச்சைக்கு அரசு உதவுமா?
பெருந்துறை: மூளை புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு, 'ஜெனிடிக்' சிகிச்சை அளிக்க, போதிய பணமின்றி தவிக்கும் பெற்றோர், அரசு மற்றும் தனியார் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் வேலுமணி. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரபா; மருத்துவர். இவர்களின் ஒரே மகன், மெர்வின் பிரைட் டேனியல், 3; பிப்., மாத இறுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக, மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்டான்.
உறுதி : ஈரோட்டில் செய்த பரிசோதனையில், முற்றிய நிலையில் மூளை புற்றுநோய் கண்டுபிடிக்கப் பட்டது. பெங்களூரு, சென்னையில் நடத்திய பரிசோதனையில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மெர்வினுக்கு குறைந்த வயது என்பதால், கேன்சர் நோயாளிகளுக்கு வழக்கமாக அளிக்கப்படும், 'கீமோ தெரபி' சிகிச்சையை பின்பற்ற முடியாது. புற்றுநோய் பாதிப்பு ஜீன்களை கண்டறிந்து, அழிக்கும், 'ஜெனிடிக் தெரபி' முறையில் தான், குணப்படுத்த முடியும். இதற்கான சிகிச்சை, அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. 'முற்றிய நிலையில் பாதிப்பு உள்ளதால், இன்னும் இரண்டு வாரத்துக்குள் சிகிச்சையை ஆரம்பித்தால் மட்டுமே, மெர்வினை காப்பாற்ற இயலும்' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை : இதற்கான ஆரம்பக்கட்ட செலவு மட்டுமே, 50 லட்சம் ரூபாய். மனைவியின் நகைகளை விற்று, நண்பர்களிடம் கடன் பெற்று, 20 லட்சம் ரூபாய் வரை வேலுமணி சேர்த்துள்ளார். அதற்கு மேல் அவரால் புரட்ட முடியவில்லை. வரும், 29ம் தேதி மெர்வினை, சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல, விசா நேர்காணல் நடக்கிறது. அதற்குள், அவ்வளவு பணத்தை புரட்ட முடியாது. 'அரசு உதவி செய்தால், மகனை காப்பாற்ற முடியும்' என, வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், இரு வாரங்களாக, குழந்தையின் பேச்சு திக்கித் திக்கியே வருகிறது. ஒரு கை, ஒரு கால் செயல்பாடு குறைந்துவிட்டதால், படுத்த படுக்கையாகி விட்டான். இதனால், பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
சிகிச்சையை எதிர்நோக்கும் மெர்வினுக்கு, உதவ, 98657 - 22737 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment