மின்விசிறியிலே ஏற்படுத்தலாம் 'ஏசி' இனி வேண்டாமே கோடை 'டென்ஷன்'
சிவகாசி:கோடை துவங்கும் கால கட்டத்தில் வெயில் மக்களை பெரிதும் வாட்டி வதைக்கும். இதில் இருந்து தப்பிக்க நாம் பல்வேறு முயற்சிகளை எடுப்போம்.
வீட்டில் 'ஏசி' மாட்டுவது, குளிர்சாதன பெட்டி வாங்கி வைப்பது என செலவினங்களை அதிகப்படுத்தும். ஒரு காலத்தில் ஊரெங்கும் மரங்கள் இருந்தன. இதனால் நாம் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்து வந்தோம். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது.
மின் கட்டணம்
நகர் பகுதிகள் கான்கிரீட் வீடுகளாக மாறிவருகின்றன . இதனால் வீட்டில் கண்டிப்பாக 'ஏசி' இருந்தாகவேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். சந்தையில் இன்று 'ஏசி' வாங்க வேண்டுமென்றால் ரூ.சில ஆயிரங்கள் செலவழித்தே ஆகவேண்டும். 'ஏசி' பொருத்தியவுடன் தானாகவே மின் கட்டணம் அதிகரித்துவிடும். இதனாலே பலரும் 'ஏசி' யை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேஜை மின்விசிறி
இந்நிலையில் 'ஏசி'க்கான பணம் மற்றும் மின் கட்டணம் என இரண்டும் இன்றி வீட்டிலே 'ஏசி' வசதி ஏற்படுத்தலாம். இதற்கு மின்சாதன கருவிகளில் அதிக ஆர்வம் மற்றும் முயற்சி இருந்தால் போதும். இன்டெர்நெட் வாயிலாக கிடைக்கும் தகவல் மூலம் வீட்டில் இருக்கும் மேஜை மின்விசிறியை மினி 'ஏசி' யாக மாற்ற முடியும். இதற்காக நமக்கு தேவைப்படும் உபகரணங்கள் காப்பர் கம்பிகள், மீன் வளர்ப்புக்கு துணை புரியும் ஆக்சிஜன் மோட்டார், பெரியளவிலான ஐஸ் கட்டிகள் மட்மே.
சுருள் வடிவில்
முதலில் மேஜை மின் விசிறியின் மேல் தரப்பு இரும்பு மூடியை வெளியில் எடுத்து காப்பர் கம்பிகளை வைத்து சுற்றிக் கொள்ள வேண்டும். நன்றாக இணைத்து சுருள் வடிவில் கட்டியப்பின், இணைக்கும் இரு கம்பிகளை மட்டும் அப்படியே விட்டு விட வேண்டும். அந்த கம்பியில் நாம் மீன் தொட்டியில் பயன்படுத்தும் ஆக்சிஜன் மோட்டாரின் பிளாஸ்டிக் குழாய்களை உள்ளே நுழைத்து இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும்.
அதன்பின் பெரியளவிலான ஐஸ்கட்டிகளை எடுத்து எடைக்கு தகுந்த பிளாஸ்டிக் பேக்கில் வைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மோட்டாரை அதற்குள் போட்டுவிட வேண்டும்.
காப்பர் கம்பி
அடுத்து பிளாஸ்டிக்பை நிரம்பும் அளவு தண்ணீர் விட, தண்ணீரில் ஐஸ் கட்டி மிதக்கும் படி இருத்தல் வேண்டும். பின் மோட்டாரை மீன் வளர்ப்பு தொட்டியில் இயக்குவது போல் மின் இணைப்பு கொடுத்து இயக்கினால் அதில் இருந்து வரும் குமிழ்கள், குழாய் வழியாக காப்பர்
கம்பிகளுக்கு சென்று மின்விசிறி வழியாக குளிர்ந்த காற்றினை வெளிவரச் செய்யும். இதுவே குறைந் த செலவில் வீட்டில் 'ஏசி' செய்யும் முறையாகும்.
சிவகாசி இன்ஜினியர் ரவிசங்கர் கூறுகையில், “இன்டர்நெட் வாயிலாக நமக்கு பல்வேறு தகவல் பெறுகிறோம். அத்தகவலை நாம் படித்து காற்றோடு பறக்கவிட்டு விடுவோம். யாரும் செய்முறை செய்வதில்லை.
குறைந்த செலவில் வீட்டில் இருக்கும் மேஜை மின்விசிறியில் 'ஏசி'செய்ய முடியும். இதை சாத்தியப்படுத்த முயற்சி மட்டும் இருந்தால் போதும். இதை செய்தால் இனி நீங்கள் வெயில் காலத்தில் 'ஏசி' தேடி அலைய வேண்டிய தேவையில்லை,” என்றார்.
No comments:
Post a Comment