மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்பு:'ரேங்க்' பட்டியல் கேட்கிறது மத்திய அரசு
தமிழகத்தில் மருத்துவமனை அமைக்க மதுரை உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஏப்.,2015ல் மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தாரித்ரி பாண்டா தலைமையிலான குழு இட தேர்வு குறித்த ஆய்வுக்காக தமிழகம் வந்தது. ஆனால் ஆய்வு பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இருப்பினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மன்னார்குடி கும்பலை திருப்திப்படுத்த எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சையில் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்தார்.
இது தென்மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்வரின் முடிவை எதிர்த்து தென் மாவட்டங்களில் பல்வேறு சங்கங்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. விரைவில், கடையடைப்பு போராட்டம் மற்றும் டில்லியில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை, எய்ம்ஸ் அமைக்க பரிந்துரை செய்யப்பட்ட மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சி புரம் ஆகிய இடங்களில் உள்ள வசதிகளின் அடிப்படையில் 'ரேங்க்' பட்டியல் தயாரித்து தருமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அனுப்பப்பட உள்ள இப்பட்டியலின் அடிப்படையிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையின் அமைவிடம் தேர்ந்தெடுக்கப்படும்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: விமான சேவை, நான்கு வழிச்சாலை, டாக்டர்களுக்கான இருப்பிட வசதி போன்றவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கி அதன் அடிப்படையில் 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை முதலிடம் பெறும் நிலையில் உள்ளது. ஆனால், சிலரது சுயநலத்திற்காக தஞ்சையை முன்னிலைப்படுத்த ஆளும்கட்சி முயன்று வருகிறது, என்றார்.
No comments:
Post a Comment