Thursday, March 23, 2017

போன் செய்தால் போதும் தபால்காரர் வீட்டுக்கு வருவார்

புதுடில்லி: தபால்காரருக்கு போன் செய்து, முகவரியை கூறினால், அவர் வாடிக்கையாளரின் வீட்டுக்கு வந்து, தபால்களை வாங்கிச் செல்லும் திட்டத்தை, தபால் துறை துவக்கியுள்ளது. கடிதங்களை, தபால்காரர் நம் வீட்டுக்கு எடுத்து வந்து தருவது வழக்கமாக உள்ளது. மொபைல் போன் மற்றும் இ - மெயில் வந்தபின், மக்களிடையே கடிதம் எழுதும் வழக்கம் வெகுவாக குறைந்து விட்டது; அப்படியே கடிதம் அனுப்ப வேண்டியிருந்தாலும், கூரியர் மூலம் அனுப்புகின்றனர்.

 இந்த காரணங்களால், தபால் துறை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. போட்டிகளை சமாளிக்கவும், தபால் துறையை மேம்படுத்தவும், 'மை பிரண்ட் போஸ்ட்மேன்' என்ற திட்டத்தை, தபால் துறை துவக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பகுதிக்கும், தபால்காரரின் மொபைல் எண் வழங்கப்படும். கடிதம் அனுப்ப நினைப்பவர்கள், தபால்காரருக்கு போன் செய்தால், அவர் உங்கள் வீடு அல்லது நிறுவனத்திற்கு நேரடியாக வந்து தபாலை பெற்றுச் செல்வார். இதற்கு கட்டணம் கிடையாது. தபால் துறையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தபால்காரரை தவிர, வேறு யாரிடமும் தபாலை தர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு அல்லது நிறுவனங்களில் தபாலை பெற செல்லும்போது, தபால்காரர்கள் முழு சீருடையில் செல்லும்படியும் தபால் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.12.2024