Tuesday, March 14, 2017

அடக்கத்துடன் மன்னிப்பு கேட்பதே நல்லது - நீதிபதி கர்ணனுக்கு ராம் ஜெத்மலானி கடிதம்

எம்.சண்முகம்


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் சி.எஸ்.கர்ணன்; தமிழகத்தைச் சேர்ந்தவர். நீதிபதிகள் மீது இவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்காக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கர்ணனை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. குறிப்பிட்ட தேதியில் அவர் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் மற்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளார். அவரது நடவடிக்கை நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவை எம்பி-யும், நாட்டின் மூத்த சட்ட நிபுணர்களில் ஒருவருமான ராம் ஜெத்மலானி (93) கர்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
நான் உங்களைச் சந்தித்ததும் இல்லை. உங்களைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால், தற்போது உங்கள் செயல் களால் நீங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பிரப லம் அடைந்துள்ளீர்கள். நீங்கள் நிதானத்தை இழந்து விட்டீர்கள் என்றே கருதுகிறேன். இதைச் சொல்வதற்காக வருந்துகிறேன். அதுவே இப்பிரச்சினையில் இருந்து நீங்கள் தப்பிக்க உதவும் என்று கருதுகிறேன். உங்கள் முயற்சியில்நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை.

மூத்த வழக்கறிஞர் என்ற முறையிலும், கடவுளின் விமான நிலையத்தில் புறப்பட காத்திருப்ப வன் என்ற முறையிலும் நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால், நீங்கள் இதுவரை சொன்ன வார்த்தைகள் அனைத்தை யும் வாபஸ் பெற்றுவிட்டு, இதுவரை செய்த செயல்களுக்கு அடக்கத்துடன் மன்னிப்பு கேட்பதே நல்லது. உங்களுடைய செயல் களின் பாதிப்பை நீங்கள் உணராவிட்டால், என்னைச் சந்தியுங்கள். உங்களுக்கு நான் அதை உணர்த்துகிறேன். ஊழல் நிறைந்த இந்த நாட்டில், நீதித்துறை தான் ஒரு பாதுகாவலன். அதை அழிக்கவோ, பலவீனமடையவோ செய்யாதீர்கள்.

மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் நான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல நேரங்களில் உழைத்துள்ளேன். பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறையும் பரிவும் கொண்டுள்ளேன்.
ஆனால், நீங்கள் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், நாட்டுக்காகவும் அதிகம் உழைத்த ஒரு மூத்த குடிமகனின் அர்த்தமுள்ள அறிவுரையை தயவுசெய்து கேளுங்கள்.

இவ்வாறு ராம் ஜெத்மலானி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024