லாலுவிடம் மீண்டும் விசாரிக்க உத்தரவு: நிதீஷ் குமாருக்கு நெருக்கடி
பதிவு: மே 09, 2017 15:15
மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து கூட்டணி ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ரூ.900 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. அவர் தேர்தலில் நிற்கவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சில மாதங்கள் ஜெயிலில் இருந்த லாலு பிரசாத் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தண்டனையை எதிர்த்து லாலுபிரசாத் யாதவ் அப்பீல் செய்துள்ளார்.
அதே சமயம் லாலு பிரசாத் யாதவ், ஜெகநாத் மிஸ்ரா, முன்னாள் தலைமைச் செயலாளர் சாஜல் சக்ரவர்த்தி ஆகியோர் மீதான மற்ற 4 வழக்குகளை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு லாலுபிரசாத், ஜெகநாத் மிஸ்ரா மீதான வழக்குகளை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு மீண்டும் தனியாக விசாரித்து 9 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது லாலுபிரசாத்துக்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியதுடன் பீகாரில் லாலு கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தும் முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள லாலுபிரசாத் யாதவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? என்று மாநில பா.ஜனதா தலைவர் சுஷில் குமார் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். இதில் நிதீஷ்குமார் கூட்டணியை முறித்துக் கொண்டால் பா.ஜனதா மேலிடம் அடுத்த நடவடிக்கை எடுக்கும். பலவீனமான லாலுபிரசாத் மற்றும் அவரது மகன்களுடன் நிதீஷ்குமார் நீண்ட நாள் நீடித்து இருக்க மாட்டார் என்றும் சுஷில்குமார் மோடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment