டி.டி.வி.தினகரன் திகார் சிறையில் அடைப்பு 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
மே 02, 05:45 AM dailythanthi
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் போலீஸ் விசாரணை முடிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டி.டி.வி.தினகரனை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுடெல்லி,
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விசாரணை
அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோர்ட்டு அனுமதியுடன் அவர்கள் இருவரையும் டெல்லி போலீசார் சென்னை அழைத்து வந்து 3 நாட்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, இந்த வழக்கில் முதலில் கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் பேச தினகரன் பயன் படுத்திய செல்போனை அவர்கள் கைப்பற்றியதாகவும், சென்னையில் உள்ள 5 வங்கி கணக்குகள் மூலம் ஹவாலா தரகர்களுக்கு பணம் அனுப்பப்பட்டதை கண்டுபிடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.50 லட்சம் பறிமுதல்
3 நாட்கள் விசாரணைக்கு பின் தினகரனையும், மல்லிகார்ஜூனாவையும் வெள்ளிக் கிழமை இரவு மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் அவரிடமும், இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ள ஹவாலா தரகர் நரேஷ் மற்றும் மற்றொரு ஹவாலா தரகரான புல்ஹித், சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த வக்கீல் கோபிநாத் ஆகியோரிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையை தொடர்ந்து புல்ஹித்திடம் இருந்து குற்றப்பிரிவு போலீசார் ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தினகரன் கோர்ட்டில் ஆஜர்
இந்த நிலையில், தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு டெல்லி தனிக்கோர்ட்டு வழங்கிய 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று தனிக்கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு ஆஜர்படுத்தினார்கள். இதற்காக இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
கோர்ட்டில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் சார்பில், தினகரனிடமும், மல்லிகார்ஜூனாவிடமும் விசாரணை முடிந்துவிட்டதாகவும், இந்த வழக்கில் மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும், தங்கள் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
15-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரையும் வருகிற 15-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.
அப்போது தினகரன் தரப்பில், சிறையில் அவருக்கு மருத்துவ உதவி அளிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். அதற்கு நீதிபதி, இது தொடர்பாக சிறைத்துறையிடம் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். சிறைத்துறை விதிகளின் அடிப்படையில் தினகரனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்க சிறைத்துறை முடிவெடுக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும் தினகரன், மல்லிகார்ஜூனா ஆகிய இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதற்கும் சிறைத்துறையிடம் விண்ணப்பிக்குமாறு நீதிபதி கூறினார்.
காணொலி காட்சி மூலம் விசாரணை
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தினகரனிடம் கோர்ட்டு விசாரணையை இனி காணொலி காட்சி மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தினகரனிடமும், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவிடமும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹவாலா தரகர் நரேஷின் ஒரு நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, அவரையும் தனிக்கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். நரேஷையும் 15-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டார்.
திகார் சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் ஹவாலா தரகர் நரேஷ் ஆகியோரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று திகார் சிறை வளாகத்தில் உள்ள 7-ம் எண் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு இன்னும் 3 நாட்களில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாக கோர்ட்டுக்கு வந்திருந்த தினகரன் தரப்பு வக்கீல்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment