Monday, May 1, 2017

தொடர் தோல்விகள்... தடுமாறும் ஆம் ஆத்மி...!

கே.பாலசுப்பிரமணி


அரசியல் அரங்கில் அசுர வளர்ச்சி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, அதே வேகத்தில் இப்போது சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. டெல்லியைப் போல பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடித்துவிடும் எதிர்பார்ப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். ஆனால், பஞ்சாப் தேர்தலில் படு தோல்வி அடைந்தது ஆம் ஆத்மி கட்சி. எனினும், அங்கு 20 இடங்களைப் பிடித்து எதிர்கட்சி அந்தஸ்தைத் தக்க வைத்துள்ளது.

இடைத்தேர்தல் தோல்வி

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ரஜோவ்ரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. பி.ஜே.பி வெற்றி பெற்றது. இப்போது நடந்து முடிந்த டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி அபார வெற்றி பெற்றிருக்கிறது. டெல்லியில் ஆளும் கட்சியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி வெறும் 48 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

2015-ல் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் டெல்லி மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், 2 ஆண்டுகளுக்குள் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

வெளிமாநிலங்களில் கவனம்

அதில் முதன்மையானது, டெல்லியில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு பஞ்சாப், கோவா என்று அரவிந்த் கெஜ்ரிவால் வெளிமாநிலங்களில் ஆட்சியைப்பிடிக்க குறிவைத்ததுதான் காரணம் என்கிறார்கள். மோடிக்கு எதிரான நபராக அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது கட்சியினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். டெல்லியைத் தவிர்த்து பிற மாநிலங்களில் கால்பதிக்க நினைக்கிறது. ஆனால், கட்சியில் பிரபலமானவர் என்று பார்த்தால் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே. அவரை டெல்லி மக்கள் தங்கள் முதல்வராகப் பார்த்தார்கள். ஆனால், டெல்லி மீது கவனம் செலுத்துவதை அரவிந்த் கெஜ்ரிவால் குறைத்துக் கொண்டார். அதனால்தான் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர்.

அதே போல உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் கட்சியின் சாதனைகளைச் சொல்லாமல், பி.ஜே.பி-யை விமர்சனம் செய்வதிலேயே நேரத்தை செலவிட்டனர். ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல தவறி விட்டனர். இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

கெஜ்ரிவால் மீது அதிருப்தி

2015 தேர்தலில் ஊழலுக்கு எதிரான நிலையை ஆம் ஆத்மி கையில்
எடுத்தது. அது டெல்லி மக்களிடமும் எடுபட்டதால் வெற்றி பெற்றது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் அது போல இந்த முறை எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தையும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பி.ஜே.பி முறைகேடு செய்கிறது என்றும் சொன்னார்கள். இது மக்களிடம் எடுபடவில்லை.

டெல்லியில் உள்ளாட்சி தேர்தல்தான் நடந்தது என்ற போதிலும், இந்தத் தேர்தலில் கூட பி.ஜே.பி சார்பில் மோடியைத்தான் முன்னிறுத்தினர். ஆனால் மோடிக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலை குறிப்பிடுகின்றனர். முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை. இலாகா இல்லாத முதல்வராகத்தான் இருக்கிறார். ஆட்சியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நபர்தான் ஆட்சியை கவனித்து வருகிறார். இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் தலைவர் கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கடந்த ஒரு மாதமாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எம்.எல்.ஏ- வேத் பிகராஷ் என்பவர் பி.ஜே.பி-யில் சேர்ந்ததும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் ஆத்மியின் மூத்த தலைவராகக் கருதப்படும் குமார் விஸ்வாஸ் டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரம் செய்யவில்லை. இது தவிர தமது கட்சி ஊழலில் திளைப்பதாக ஒரு பரபரப்பு வீடியோவையும் இவர் வெளியிட்டார். இதுவும் ஆம் ஆத்மிக்கு எதிராக முடிந்தது. டெல்லி உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஆம் ஆத்மி-யில் தலைவர் பொறுப்பில் மாற்றம் வர வேண்டும் என்றும் குமார் விஸ்வாஸ் பேசி இருக்கிறார்.

சுயபரிசோதனை அவசியம்

அடுத்தடுத்த தோல்விகளால் கலங்கிப் போயிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இன்று பேசுகையில், " கடந்த இரண்டு நாட்களாக பல தன்னார்வலர்கள், வாக்காளர்களிடம் பேசினேன். இதன் மூலம் ஒரு உண்மைத் தெளிவாகத்தெரிகிறது. ஆம். நாம் தவறு செய்து விட்டோம். தவறுகள் குறித்து நமக்கு நாமே சுய ஆய்வு செய்து கொண்டு தவறுகளை சரி செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம். இப்போதைக்கு நமக்கு செயல்தான் முக்கியம். நொண்டிசாக்குகள் முக்கியமல்ல"என்றார்.

இது தவிர வரப்போகும் நாட்களில் கெஜ்ரிவால் மற்றும் ஒரு பின்னடைவைச் சந்திக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். ஆம் ஆத்மியின் டெல்லி எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது ஆதாயம் தரும் இன்னொரு பதவி வகிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களை பதவி நீக்கம் செய்யும்படி குடியரசுதலைவருக்கு பி.ஜே.பி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தச் சூழலில் 21 எம்.எல்.ஏ-க்கள் குறித்து கருத்துக்கள் சொல்லும்படி தேர்தல் ஆணையத்துக்கு குடியரசு தலைவர் கடிதம் எழுதி உள்ளார். குடியரசுத் தலைவரின் கடிதம் மீது மே 15-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்த சரிவுகளில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மீளுவாரா?

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024