Tuesday, May 2, 2017

அதிரடி.. .!
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்...
போலீஸ் உதவியுடன் மே 4ல் மனநலத்தை பரிசோதிக்க உத்தரவு


புதுடில்லி: 'கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, சி.எஸ்.கர்ணனுக்கு, வரும், 4ல், போலீஸ் உதவியுடன் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கடந்த ஆண்டு, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போது, அந்த உத்தரவை ரத்து செய்து, தானாகவே உத்தரவிட்டு சர்ச்சையில் சிக்கினார். பின், மன்னிப்பு கேட்டு, கோல்கட்டா ஐகோர்ட்
நீதிபதியாக பொறுப்பேற்றார்.

அவமதிப்பு வழக்கு

இதனிடையில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி உட்பட, 20 நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார்; இதை, கோர்ட் அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட், நேரில் ஆஜராக, நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆஜராக மறுத்ததால், நீதிபதி கர்ணனுக்கு எதிராக, தலைமை நீதிபதி அடங்கிய, ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் அமர்வு, கைது, 'வாரன்ட்' பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி கர்ணன்

ஆஜரானார். தன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்குதொடர்ந்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு எதிராக, தானாகவே அவதுாறு வழக்கை தொடர்ந்தார்.

இந்த நிலையில், 'நீதிபதி கர்ணன், எவ்வித நிர்வாக மற்றும் நீதித் துறை நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நீக்க வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்தது.

இதற்கிடையே, இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான, ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, வரும், 4ல், கோல்கட்டா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் குழு பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் நீதிபதி கர்ணன் பங்கேற்பதை, மாநில போலீஸ் டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும். அதற்காக போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

கடைசி வாய்ப்பு

வரும், 8ல் மருத்துவ அறிக்கையை இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்பான, தன் தரப்பு வாதத்தையும் அறிக்கையாக அன்றைய தினம், நீதிபதி கர்ணன் தாக்கல் செய்யலாம். அவ்வாறு அவர் பதில் ஏதும் தாக்கல்செய்யாவிட்டால், அவர் கூறுவதற்கு ஏதுமில்லை என எடுத்துக் கொள்ளப்படும். வழக்கின் விசாரணை, 9ல் நடக்கும். இதனிடையில், பிப்., 8க்குப் பின், நீதிபதி கர்ணன் பிறப்பித்துள்ள எந்த உத்தரவையும், நாடு முழுவதும் உள்ள மற்ற கோர்ட்கள், தீர்ப்பாயங்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளது.

ஒரு நீதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டே, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது, இதுவே முதல் முறை. மேலும், நீதிபதிக்கு மனநல மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளது, நீதித் துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடும் விளைவை சந்திக்க நேரிடும் நீதிபதி கர்ணன் எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கோல்கட்டாவில் நிருபர்களிடம், நீதிபதி கர்ணன் கூறியதாவது: என்னை கட்டாயப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்றால், போலீஸ், டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்வேன்.

அதற்கு முன்னதாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட, ஏழு நீதிபதிகளுக்கு, டில்லியில் உள்ள மருத்துவமனையில் மனநல மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை, டில்லி போலீஸ் டி.ஜி.பி., செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Recovery of commutation: Ex-forest officials move CAT .‘Officers Knew Rule When They Opted For Scheme’

Recovery of commutation: Ex-forest officials move CAT . ‘Officers Knew Rule When They Opted For Scheme’ SagarKumar.Mutha@timesofindia.com 29...