வேண்டும் இஸ்ரேல் தொழில்நுட்பம்!
பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்றதில் இருந்து பல
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். ஒவ்வொரு சுற்றுப்பயணமும்
ஏதாவது ஒருவகையில் சிறப்பு மிகுந்ததாக இருக்கிறது.
70 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையில், இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் சென்றதில்லை என்றவகையில், நரேந்திர மோடியை வரவேற்ற இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன் யாஹூ 70 ஆண்டுகளாக இந்திய பிரதமரின் வருகைக்காக இஸ்ரேல் காத்துக் கொண்டிருந்தது என்று கூறினார். இந்தியாவுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் 1992–ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் இருந்தாலும், அந்த உறவுகள் எல்லாம் இதுவரையில் இப்போதுபோல் வலுப் பட்டது இல்லை. இவ்வளவுக்கும் நமது ராணுவ தளவாடங் களை பெருமளவில் இஸ்ரேல் நாட்டிலிருந்துதான் வாங்கு கிறோம்.
இந்த சுற்றுப்பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. குறிப்பாக நீர்வளம், வேளாண்மை, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற பல துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு நன்மை பயக்கும். இந்த பயணத்தில் நரேந்திரமோடி, இஸ்ரேல் நாட்டு மக்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டு போய்விட்டார் என்றே கூறலாம். ‘பெர்சனல் டச்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒவ்வொரு உள்ளத்தையும் தொடுவதுபோல 41 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விமான கடத்தலை தடுக்க முயன்ற போது உயிர் இழந்த இஸ்ரேல் நாட்டு பிரதமர் நேதன் யாஹூவின் சகோதரர் யோனத்தான் பற்றி தன்பேச்சில் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் படையால் 15 லட்சம் குழந்தைகள் உள்பட 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட பேரழிவு நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 26–ந்தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிர் இழந்த மதகுருவான தன் தந்தையையும், தாயையும் இழந்து தான் மட்டும் உயிர்தப்பி, தற்போது இஸ்ரேலில் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வரும் 11 வயது சிறுவன் மோஷேயை வரவழைத்து அவனிடம் அன்புடன் பேசினார். மேலும் அவனும், அவனது குடும்பத்தினரும் எந்த நேரத் திலும் இந்தியாவுக்கு வரலாம் என்ற வகையில், ‘நீண்டகால விசா’ வழங்கியது மிகவும் உருக்கமாக இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் நரேந்திரமோடியும், நேதன் யாஹூவும் நெருங்கிய நண்பர்களைப்போல பழகினர்.
இஸ்ரேல் நாடு தண்ணீர் பஞ்சம் உள்ள நாடு. அங்கு கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்கள் மூலமாகத்தான் பெரும்பாலான விவசாயம், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், குறைந்தளவு பெய்யும் மழை நீரையும் முறையாக சேமிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துபவர்கள் இஸ்ரேல் நாட்டினர். அங்கு கடல்நீர் அல்லது மாசு கலந்த தண்ணீரிலிருந்து சுவைமிக்க குடிநீரை தயாரிப்பதற்கான அதிநவீன நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில் உள்ள ஓல்கா கடற்கரைக்கு நரேந்திரமோடி அந்த நாட்டு பிரதமருடன் சென்றபோது, இந்த வாகனத்தில் இருந்து கடல்நீரை குடிநீராக மாற்றி கிடைத்த தண்ணீரை இருவரும் பருகினர். இந்த வாகனம் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்கும். அதுபோல, 80 ஆயிரம் லிட்டர் சகதி, மாசு கலந்த ஆற்றுநீரை அல்லது குளத்து நீரை சுத்திகரிக்க முடியும். கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்கி லட்சக்கணக்கான மக்களுக்கு குடிநீர் வழங்குவோம் என்று நேதன் யாஹூ குறிப்பிட்டி ருக்கிறார். இஸ்ரேல் நாட்டின் இந்த தொழில்நுட்பங்களை உடனடியாக வாங்கி தமிழ்நாடு போன்ற தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும். தமிழக அரசும் இந்த கோரிக்கையை பிரதமருக்கு வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment