‘இனி திருமணங்களைப் பதிவு செய்யாவிட்டால், சிக்கல்!’ - மணமக்களின் பெற்றோர் மீது பாயுமாம் வழக்கு
எஸ்.மகேஷ்
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் உதவித்தொகை மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலை நாட்டு கலாசாரத்தால் இந்தியாவின் கலாசாரம் சீரழிந்து வருகிறது. குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டுக்கே சிக்கல் எழுந்துள்ளது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை மாயமாகி தனிக்குடித்தனத்துக்குச் செல்லும் கணவன், மனைவிக்கு இடையே எதற்கெடுத்தாலும் ஈகோ பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால், பலருக்குத் திருமண வாழ்க்கை விரைவில் கசந்துவிடுகிறது. கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்ப நீதிமன்றங்கள் மூலம் விவகாரத்துப் பெறும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றன. குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் ஏற்கெனவே நடந்த திருமணங்களை மறைப்பதைத் தடுக்கவும்
திருமணப்பதிவை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்யும் ஏமாற்று ஆண்கள், பெண்களும் சமூகத்தில் அதிகமாகிவருகின்றன. இதற்கெல்லாம் முறைப்படுத்தப்படாத திருமணங்களே காரணம் என்று மத்திய அரசு கருதியது. இதனால், திருமணங்களை முறைப்படுத்த சில ஆண்டுகளாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்த மத்திய சட்ட ஆணையம், சமீபத்தில் மத்திய அரசுக்கு அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதில், "இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்தத் தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டும். அதன்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்டத் திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு திருமணப்பதிவு சட்டத்தின்படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். தற்போது, திருமணம் நடந்த 30 நாள்களுக்குள் கட்டாயமாகத் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள், திருமணச் சலுகைகளைப் பெற முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழகப் பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 ன் படி தமிழகத்தில் நடக்கும் திருமணங்கள் 90 நாள்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், பதிவு செய்ய 60 நாள்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் திருமணத்தைப் பதிவு செய்வதில்லை. 150 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், இதை யாரும் கண்டுக்கொள்வதில்லை. தற்போது, மத்திய அரசு, திருமணத்தைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருப்பதால் திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் மீது மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால் திருமணச் சலுகைகள் இல்லை என்பதால் இனித் திருமணப்பதிவு எண்ணிக்கை அதிகரிக்கும்" என்றார்.
திருமணத்தைப் பதிவு செய்யும் வழிமுறைகள்
தமிழ்நாடு திருமணச் சட்டம் - 2009ன் படி திருமணம் நடந்த 90 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று பதிவுச் செய்யவேண்டும். 90 நாள்களுக்குள் பதிவு செய்தால் 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும். 150 நாள்களுக்குப் பிறகு திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது.
திருமணத்தன்று ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் பூர்த்தியாயிருக்க வேண்டும். திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக திருமண அழைப்பிதழ், கோயில், சர்ச், பள்ளிவாசல் ஆகிய நிர்வாகம் வழங்கிய திருமணம் நடந்ததாகக் கொடுக்கும் ஆவணம், நோட்டரி அபிடிவிட் போன்ற ஆவணங்களைச் சமர்பிக்கலாம். முகவரிக்காக, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகியவற்றில் ஒன்றைச் சமர்பிக்க வேண்டும். வயதுக்கான சான்றிதழாகப் பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது விசா ஆகிய ஒன்றில் கொடுக்கலாம். மேலும், மூன்று நபர்கள் சாட்சியாக கையெழுத்திட வேண்டும். சாட்சிகளும் ஓர் அடையாள அட்டையும் காண்பிக்க வேண்டும். அடுத்து, மணமக்கள் தலா நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் கொடுக்க வேண்டும். இதற்கென விண்ணப்படிவமும் உள்ளது. அதை பூர்த்தி செய்து பதிவுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பித்தால் போதும் என்று வழிமுறைகளையும் விளக்கினர் பதிவுத்துறை வட்டாரங்கள்.
No comments:
Post a Comment