Saturday, July 8, 2017

சென்னை நகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காலிகுடங்களுடன் வீதி, வீதியாக அலையும் மக்கள்



சென்னை நகரில் குடிநீருக்காக காலி குடங்களுடன் மக்கள் வீதி, வீதியாக அலையும் நிலை காணப்படுகிறது.

ஜூலை 08, 2017, 05:30 AM

சென்னை,

தமிழகத்தின் தலைநகரான சென்னை கடந்த 1947, 1954, 1968, 1972, 1975, 1982, 1983, 2001 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் குடிநீர் பஞ்சத்தில் சிக்கியது. தற்போது பருவமழை பொய்ப்பு, வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் மீண்டும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி உள்ளது.

சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் கோடையை சமாளிப்பதற்கு கைகொடுக்கவில்லை. கடல் போன்று காட்சி அளித்த இந்த ஏரிகள் அனைத்தும் இன்று வறண்ட பாலைவனம் போன்று காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 83 கோடி லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், அதில் பாதி அளவு கூட தண்ணீர் கிடைப்பது இல்லை.

ஏரிகள் ஏமாற்றினாலும் நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீர் சுத்திகரிக்கும் நிலையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 20 கோடி லிட்டர் தண்ணீரும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 6 கோடி லிட்டர் தண்ணீரும், 22 கல்குவாரிகளில் இருந்து 3 கோடி லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

இது ‘யானைப்பசிக்கு சோளப்பொரி’ என்பதற்கு உதாரணம் போன்று இருக்கிறது. வீடுகளில் நாள்தோறும் குழாய்களில் பொங்கி வழிந்த தண்ணீர் இன்று சிறுதுளிகளாக விழுகின்றன. பல இடங்களில் குடிநீர் குழாய்களை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக காற்று வீசும் நிலைதான் காணப்படுகிறது.

குடிநீர் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட பெரும்பாலான குடிநீர் குழாய்களும் காட்சி பொருளாக மாறி விட்டன. தண்ணீர் வரும் குழாய்களிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் தண்ணீர் வருகிறது. இதனால் மக்கள் தண்ணீருக்காக பரிதவிக்கும் நிலை உள்ளது.

குடிநீர் எங்கே வருகிறது, குடிநீர் லாரி எப்போது வரும்? என்ற மனநிலையே மக்களிடம் காணப்படுகிறது. காலிகுடங்களுடன் மக்கள் வீதி, வீதியாக தண்ணீரை தேடி அலைவது அன்றாட காட்சியாகி விட்டது. தண்ணீர் கிடைக்கும்போது, அதை சேமித்து வைக்கவேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் அதிகரித்து உள்ளது. இதனால் பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு சென்னை நகரம் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவித்த போது, ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் சரக்கு ரெயில் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த ஆண்டு சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு மற்ற மாவட்டங்களால் கைகொடுக்க முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024