அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்
Published : 26 Aug 2017 19:09 IST
நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்.
சென்னை
அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் 1989-ல் அதிமுகவில் இணைந்தார். பணகுடி நகரச் செயலாளார், திருநெல்வேலி மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் 2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துத் துறை அமைச்சரானார்.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே சசிகலா, தினகரனை ஆதரித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் நயினார் நாகேந்திரன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இது தமிழகத்தில் மிக ஆழமாக காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் கனவுக்கு செயல்வடிவம் கொடுப்பதாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment