சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை
பதிவு செய்த நாள்
03நவ2017
05:16
சென்னை: சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. பல பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தொடர்மழை:
வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது காரணமாக கடந்த 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை விடாமல் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்து பெய்தது. விடிய விடிய கனமழை பெய்தததால் சென்னை முழுவதும் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வாகனங்கள் செல்ல முடியாதபடி பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. பல பகுதிகளிலும் வீட்டினுள் வெள்ள நீர் புகுந்தது.
அறிவுறுத்தல்:
தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன.
விடுமுறை:
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர், நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், விடுமுறை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
இன்று நடைபெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலை., ஒத்திவைத்துள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment