Saturday, November 18, 2017

சசிகலா,கும்பல்,இந்த ஆண்டு,தண்டனை,பெற்றவர்கள்,6

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் உள்ள நிலையில், லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்ததில், மத்திய அரசுக்கு, 1.06 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், அவரது கணவர் நடராஜனுக்கும், இரண்டாண்டு சிறைத் தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதே வழக்கில், தினகரனின் சகோதரர் பாஸ்கரனும், இரண்டு ஆண்டுகள், 'கம்பி' எண்ணப் போகிறார். இந்த ஆண்டில் இதுவரை, சசி கும்பலைச் சேர்ந்த ஆறு பேர், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர். அடுத்தடுத்து பலர் சிக்கலாம் என்பதால், அவரின் சொந்தங்கள் எல்லாம் அதிர்ச்சியில் உள்ளன.

கடந்த, 1994-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 'லெக்சஸ்' ரக சொகுசு காரை, 1993-ல், தயாரித்தது போல போலி ஆவணங்கள் தயாரித்து, 1.06 கோடி ரூபாய், மத்திய அரசுக்கு சுங்க வரி இழப்பு ஏற்படுத்தியதாக, சசிகலாவின் கணவர், எம்.நடராஜன், தினகரனின் சகோதரர் பாஸ்கரன், லண்டனை சேர்ந்த பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுசரிதா ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட காரை விடுவிக்க, விற்பனை ரசீது மற்றும் லண்டனில் உள்ள மத்திய வாகன பதிவு அலுவலகம் வழங்கும் பதிவு சான்றிதழ் போன்றவற்றை, மோசடியாக தயாரித்ததாகவும், நடராஜன் மற்றும் பாஸ்கரன் மீது, குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இறக்குமதியான காரை, சுங்கத்துறை விடுவிப்பதற்காக,வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக, இந்தியன் வங்கியின், அபிராமபுரம் கிளை மேலாளராக இருந்த சுசரிதா சான்றிதழ் வழங்கி உள்ளார்.அதனால், நடராஜன், பாஸ்கரன், பாலகிருஷ்ணன், யோகேஷ், சுசரிதா ஆகியோர், மத்திய அரசை ஏமாற்றும் நோக்கில், கூட்டு சதிசெய்ததாகவும், அதனால், அரசுக்கு, 1.06 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், சென்னையில் உள்ள, சி.பி.ஐ., முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டபட்ட, பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டதால், மற்றவர்கள் குறித்த விசாரணை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

நான்கு பேருக்கும், தலா, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நடராஜன், பாஸ்கரன், சுசரிதா ஆகியோருக்கு, தலா,20 ஆயிரம் ரூபாய் அபராதமும், யோகேஷுக்கு, 40ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 2010ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட, நான்கு பேரும், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை,நீதிபதி,ஜெயச்சந்திரன் விசாரித்தார். சி.பி.ஐ., தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் வாதாடினார்.

நீதிபதி, ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

போலி ஆவணங்களை அளித்து, லெக்சஸ் காரை விடுவித்து, மத்திய அரசை ஏமாற்றிய தில், நான்கு பேருக்கும் உள்ள தொடர்பை காட்டுவதற்கு, போதுமான ஆதாரங்களை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது. ஆவணங்களின் படி, 1994 அக்டோபரில், கார் விற்பனை செய்யப் பட்டுள்ளது. 1995க்கு முன், கார் வாங்கப்பட்ட தாக கூறி, இந்தியாவுக்கு இறக்குமதி செய்துள்ளனர்.

பதிவு சான்றிதழில் தேதியை மாற்றி, 1993 ஜூலை என,காட்டி உள்ளனர். தலைமறைவான பாலகிருஷ்ணனின் பெயரில், பொய்யான மனுவை வழங்கி உள்ளனர். சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும் போது, சுங்க விதிமுறைகளை மீறி, புதிய லெக்சஸ் கார் இறக்குமதி செய்யப்பட்டது, செய்யப்படுகின்றன. சி.பி.ஐ., முதன்மை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு, உறுதி செய்யப்படு கிறது. தண்டனை காலத்தை அனுபவிக்க, நான்கு பேரையும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை, சி.பி.ஐ., நீதிமன்றம் எடுக்க வேண்டும்.

கூட்டு சதியில் பங்கேற்ற, சுங்கத் துறை மூத்த அதிகாரிகள் சிலருக்கு எதிராக, சட்டப்படியான நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்ட வசமானது. அதற்கு, சி.பி.ஐ.,க்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. எனவே, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர, ஒப்புதல் பெறும் அம்சங்கள் குறித்து, பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

தீர்ப்பை நீதிபதி வாசித்ததும், தண்டனையை குறைக்கும்படி, நடராஜன் உள்ளிட்ட நால்வர் தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் கோரினர்; அதை, நீதிபதி ஏற்கவில்லை. சிறை தண்டனை குறித்து, வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், 'உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளதால், நான்கு பேரும், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சரண் அடையலாம். சரணடையவில்லை என்றால், அவர்களை பிடித்து வந்து ஆஜர்படுத்த போலீசுக்கு, நீதிமன்றம், 'வாரன்ட்' பிறப்பிக்கும். உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, ஜாமினில் வெளி வரலாம்' என்றார்.

சொந்தங்கள் அதிர்ச்சி

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, அவரது அண்ணி இளவரசி இருவரும், பிப்ரவரியில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த கட்டமாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தினகரனின் சகோதரி சீதளாதேவி, அவரது கணவர் பாஸ்கரனுக்கு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்து ஆண்டு என, சிறை தண்டனையை, நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதன்தொடர்ச்சியாக, சொகுசு கார் இறக்குமதி வழக்கில், சசியின் கணவர் நடராஜனுக்கும், தினகரனின் சகோதரர் பாஸ்கரனுக்கும், இரண்டு ஆண்டு சிறை தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது. சசி குடும்பத்தில், இந்த ஆண்டில் இதுவரை, ஆறு பேருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.

சசிகலா கும்பலுக்கு சொந்தமான இடங்களில், சமீபத்தில் பெரிய அளவில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், 1,400௦ கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான சொத்துப் பத்திரங்கள் மற்றும் தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். பலரிடம், தோண்டித்துருவி விசாரணையும் நடந்து வருகிறது.

சசி கும்பலில் இதுவரை தண்டனை பெற்றவர் கள் தவிர, வேறு பலர் மீதும், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அந்த வழக்குகளில், அடுத்தடுத்து பலருக்கு தண்டனை கிடைக்கலாம்; கைது படலங்கள் தொடரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மன்னார்குடி வட்டாரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...