Thursday, November 2, 2017

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்திய காதலன் நள்ளிரவில் மணப்பெண்ணுடன் ஓட்டம்

2017-11-02@ 00:50:23




வேலூர்: காட்பாடி அருகே நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபர், மணமக்களுக்கு பரிசு கொடுத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, இரவோடு இரவாக மணப்பெண்ணை அழைத்து சென்று கோயிலில் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை கூட் ரோடை சேர்ந்தவர் சுகுமார். இவர் இறந்து விட்டார். இவரது மகள் நிரோஷினி(24) தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவரும் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அப்ரன்டீஸாக உள்ள குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையை சேர்ந்த விக்னேஷ்(25) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நிரோஷினிக்கு அவரது குடும்பத்தினர் உறவிலேயே மாப்பிள்ளை பார்த்து நவம்பர் 1ம் தேதி திருமணம் நிச்சயம் செய்தனர்.

திருமணம் ராணிப்பேட்டை பெல் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடப்பதாக இருந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது திடீரென இரண்டு பரிசு பொருட்களுடன் மண்டபத்துக்கு வந்த நிரோஷினியின் காதலன் விக்னேஷ் ஆளுக்கொரு பரிசு பொருளை கொடுத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது எந்த சலனத்தையும் நிரோஷினி காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், மணமகனோ பரிசு கொடுத்தவர் மணமகளின் தூரத்து உறவுக்காரராக இருக்கும் என்று நினைத்து ஜாலியாக பேசி, சாப்பிட்டு விட்டு போகும்படி கேட்டுக் கொண்டார். அங்கிருந்த செல்லும்போது நிரோஷினிக்கு புரியும்படி, பரிசு பார்சலை பிரித்து பார்க்கும்படி சைகை காட்டிவிட்டு சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில் மணமக்களுக்கு நலுங்கு வைக்கும் சடங்குகள் தொடங்கின. முதலில் மணமகனுக்கு சடங்குகள் நடந்தன.

பின்னர் மணமகள் அறையில் சென்று பார்த்த உறவினர்கள், நிரோஷினி இல்லாததை கண்டு அதிர்ந்தனர். ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மண்டபம் முழுவதும் தேடினர். நலுங்கு முடிந்து திருமணத்துக்கு தயாரான மணமகனுக்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியில் உறைந்தார். எங்குதேடியும் நிரோஷினி கிடைக்காததால் அவருக்கு திடீரென உறைத்தது. இரவு தன்னிடமும், நிரோஷினியிடமும் பேசிய நபர் குறித்து விசாரித்தார். நள்ளிரவு வரை அவர் மண்டபத்துக்குள் அங்குமிங்கும் பரபரப்பாக திரிந்ததாக பலரும் கூறினர். இதையடுத்தே மணமகள் காதலனுடன் ஓடியது தெரியவந்தது. இதனால் களை கட்டிய திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது. இருதரப்பு உறவினர்களும் மண்டபத்தில் இருந்து புறப்பட்டனர்.

மணமகனும் விரக்தியில் தனது உறவினர்களுடன் சோகமாக திரும்பி சென்றார். மணமகளின் உறவினர்களோ மதியம் 12 மணி வரை தேடும் முயற்சியை தொடர்ந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு லத்தேரி காவல்நிலையத்தில் விக்னேஷ் என்ற வாலிபருடன் நிரோஷினி மணமக்களாக மாறி தஞ்சமடைந்திருப்பதும், அவர் அந்த வாலிபரை லத்தேரி பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. மேலும் லத்தேரி போலீசார் மணமகள் தரப்பினரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தி காதல்ஜோடி மேஜர் என்பதால், அவர்களது திருமணத்தை தடுக்க வழியில்லை என்று கூறினர். அப்போது காதலனுடன் தான் செல்வேன் என்று நிரோஷினி கூறியதால் அவருடன் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024