நிற்காமல் செல்லும் தனியார் பேருந்துகள்... கொதிகொதிக்கும் மக்கள்!
நாமக்கல் மாவட்டம், பவானி குமாரபாளையத்தில், பஸ் ஸ்டாண்ட்டுக்கு வராமல் செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து, சேலம் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. ஆனால், சேலத்திலிருந்து, பவானி வரும்போது, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு பெரும்பாலான தனியார் பஸ்கள் வருவதில்லை.
இதனால் வயதானவர்கள், அதிக பாரம் கொண்டு வருபவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் என, பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மதியம், 1:50 மணியளவில், தனியார் பேருந்து ஒன்று பள்ளிபாளையம் பிரிவு சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டதால், பயணிகள் மற்றும் நடத்துநரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அனைத்து பேருந்துகளும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று குமாரபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சிலர், "தனியார் பேருந்துகள் மட்டுமில்லாமல், அரசு பேருந்துகளும் சில சமயங்களில் பள்ளிபாளையம் பிரிவிலேயே திரும்பிவிடுகின்றது. சில மாதங்களுக்கு முன் இவ்வாறு பேருந்துகள் திரும்பி செல்வது குறித்து நாளிதழில் செய்தியாகவும் வந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. காலையில் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவியருக்கும், வேலைக்குச் செல்லும் பணியாளர்களுக்கும் ரொம்ப சிரமமாக உள்ளது.
இதைப் பற்றி சேலம் போக்குவரத்து அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரையிலும் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இந்த நிலைமை. இதனால், மாற்றுத் திறனாளிகள், நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இதனைக் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை மறியல் அல்லது போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment