Sunday, November 12, 2017


ஜெயலலிதாவின் உயில் எங்கே?- அப்பல்லோ சிகிச்சை சி.டி.யை சல்லடை போட்டு தேடிய அதிகாரிகள்: வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி பின்னணி

Published : 11 Nov 2017 08:57 IST

இரா.வினோத்பெங்களூரு/ சென்னை





ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக (அம்மா) பொதுச்செயலாளருமான சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா, உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானோரின் வீடுகளிலும் கடந்த இரு தினங்களாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் சசிகலா, நடராஜன், தினகரன், விவேக், திவாகரன் உள்ளிட்டோர் தொடர்பான ஏராளமான சொத்துகளின் ஆவணங்களும், முதலீடுகளின் முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் அதிகளவில் சிக்கியது. அவர்களுக்கு நெருக்கமானோரின் வீடு,அலுவலகங்களில் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்களின் ஆவணங்கள் நிறைய சிக்கியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய ஆவணங்கள், நிறுவனங்கள், சொத்துகள் பற்றிய தகவல் கிடைத்ததாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இந்நிலையில் சசிகலா குடும்பத்தாருக்கு நெருக்கமானோரிடம் பேசியபோது, '' வருமான வரித்துறை அதிகாரிகள் இளவரசியின் மகனும், ஜெயா டிவி இயக்குநருமான விவேக்கின் வீடு, அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது மன்னார்குடி வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்ரியா, மாமனார் பாஸ்கர், உறவினர்கள், நெருக்கமானோரின் வீடுகளில் அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களை அதிகமாக கண்டுக்கொள்ளாத அதிகாரிகள், வேறு எதையோ சல்லடை போட்டு தேடினர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், டாக்டர் வெங்கடேஷ், திவாகரனுக்கு சொந்தமான இடங்களிலும் சிடி, பென் டிரைவ், சிப், மெமரி கார்டு, எலக்ட்ரிக் ஃபைல் உள்ளிட்டவற்றை தேடினர். வேறு ஏதேனும் லாக்கர், ரகசிய அறை உள்ளதா எனவும் கேட்டனர்.

விவேக், கிருஷ்ணப்ரியா, சிவக்குமார், வெங்கடேஷ், திவாகரனிடம் சொத்துகள் பற்றியும், முதலீடுகள் பற்றியும் விசாரித்தனர். அதைவிட அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்கள் பற்றியும், சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் துருவி துருவி கேட்டனர். ஜெயலலிதா உயில் எழுதினாரா? அந்த உயில் எங்கே? யாரிடம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு சிவக்குமார், வெங்கடேஷ் உள்ளிட்டோர் உரிய பதில் அளிக்காததால், அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

இதேபோல ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமான நாமக்கல் வழக்கறிஞர் செந்தில், அவரது உதவியாளர்களிடமும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு எங்கெங்கு சொத்துகள் உள்ளன? யார் பெயரில் அவை உள்ளன? கடைசியாக எழுதிய உயில் எங்கே? அதனை எந்த வழக்கறிஞர் தயாரித்து கொடுத்தார்? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு செந்திலும், மற்றவர்களும், ''எங்களுக்கு தெரியாது'' என பதிலளித்துள்ளனர்.

பெங்களூருவில் சசிகலாவின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, இதே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை சிடியை வெளியிடுவதாக அறிவித்தீர்களே? அது எங்கே இருக்கிறது? என கேட்டுள்ளனர். அதற்கு புகழேந்தி மறுப்பு தெரிவிக்க, அவரது குடும்பத்தாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சசிகலா குடும்பத்தாரின் சொத்துக்குவிப்பையும், பினாமி உள்ளிட்டவற்றையும் கண்டறிய வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதற்கு போதிய கவனம் செலுத்தவில்லை. மாறாக ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றியும், அவரது கடைசி உயில் பற்றியும், அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை சிடி பற்றியும் அதிக அக்கறை கொண்டு விசாரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா குடும்பத்தாரை வருமான வழக்கில் மட்டுமல்லாமல், குற்றவியல் வழக்கிலும் சிக்க வைக்கவே சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சசிகலாவையும், தினகரனையும் அரசியலில் இருந்தே ஒழித்து கட்டுவதற்காக இந்த சோதனை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெகா சோதனையில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ரகசிய கூட்டு இருக்கிறது'' என்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த போக்கும், விசாரணை முறையும் மெகா சோதனைக்கு உண்மையான பின்னணி என்ன? என சசிகலா குடும்பத்தாரை யோசிக்க வைத்திருக்கிறது.

No comments:

Post a Comment

‘Indian doctors and healthcare professionals are a class apart’

‘Indian doctors and healthcare   professionals are a class apart’ Tamil Nadu Governor R.N. Ravi handing over a degree to a graduand at the c...