Friday, November 3, 2017

மாவட்ட செய்திகள்

பள்ளிக்கரணையில் நாராயணபுரம் ஏரி உபரிநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது


சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உபரிநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்தது. புழுதிவாக்கம் ராமர் கோவிலில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது.

நவம்பர் 02, 2017, 04:00 AM

ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து பலத்த மழைபெய்தது.

மடிப்பாக்கம்–புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் கால்வாய்களில் தண்ணீர் செல்லாமல் தேங்கி இருந்தன.

மாநகராட்சி அதிகாரிகள், பொக்லைன் எந்திரங்களை கொண்டு தற்காலிகமாக கால்வாய்களை ஏற்படுத்தி தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

புழுதிவாக்கம் ராம்நகரில் உள்ள ஒப்பிலியப்பன் பட்டாபிஷேக ராமர் கோவிலில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.

தெருக்களில் உள்ள மழைநீர் கால்வாய்களில் அடைப்புகள் எடுக்கப்படாததால் கோவிலுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீரை, மதகுகள் வழியாக மாநகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினார்கள். ஆனால் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழிஇன்றி நாராயணபுரம் ஏரி அருகே உள்ள பள்ளிக்கரணை ஸ்ரீநகர், மகாத்மா காந்தி நகர், லட்சுமி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜேஷ் நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட வெளியே வரமுடியாத வகையில் இடுப்பு வரை தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதையடுத்து கைவேலிக்கு தண்ணீரை அனுப்ப கல்வெட்டுகளில் இருந்த அடைப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பெருங்குடி மண்டல அதிகாரிகள், மழை வருவதற்கு முன்பே கால்வாய்களை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு இருந்தால் ஓரளவு தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து இருக்கலாம். ஆனால் அதிகாரிகள் மழைக்கு முன்னர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள்.

மேலும் வேளச்சேரி பேபி நகர், உதயம் நகர், பெருங்குடி கல்லுக்குட்டை போன்ற பகுதிகளில் வீடுகளை சுற்றி இடுப்பு அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

No comments:

Post a Comment

news today 23.10.1024