Friday, November 3, 2017

வெள்ளக்காடானது சென்னை


By DIN  |   Published on : 03rd November 2017 04:43 AM  
chennai
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையச் சாலையில் வெள்ளத்தில் நீந்தி வரும் கார் .

சென்னையில் வியாழக்கிழமை (நவ.2) மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை (நவ.3) காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி அதன் அளவு அதிகரித்து பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
154 மி.மீ. மழை: வானிலை ஆராய்ச்சி மைய கணக்கீட்டு அளவின்படி வியாழக்கிழமை (நவ.2) காலை 8.30 மணி முதல் நள்ளிரவு வரை 154 மி.மீ. மழை பதிவானது; மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.3) காலை 8.30 மணிக்கு (12 மணி நேரம்) கணக்கிடும்போது, 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 200 மில்லி மீட்டரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின் விகிதமும் அதிகரிப்பு: வியாழக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியபோது அதன் விகிதம் 1 மணி நேரத்துக்கு 7 சதவீதமாக இருந்தது; வியாழக்கிழமை இரவு மழையின் விகிதம் 1 மணி நேரத்துக்கு 10 சதவீதம் என அதிகரித்து நள்ளிரவில் 20 சதவீதத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் மின் வெட்டு: மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க சென்னை நகரின் பல இடங்களில் வியாழக்கிழமை இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை சாலையின் இருபுறமும் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கி நின்றது. இதனால், தலைமைச் செயலகம், நீதிமன்றம், துறைமுகம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் என முக்கிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிகளை முடித்து வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொது மக்களும் ஆங்காங்கே வெகு நேரம் காத்திருந்தனர்.
பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்: கனமழை காரணமாக, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை பாரிமுனையில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் ரயில்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. அலுவலகப் பணிகளை முடித்து சென்னை கடற்கரை, கோட்டை ரயில் நிலையங்களில் இருந்து மாலை 6 மணிக்கு ரயில் ஏறிய பல ஊழியர்கள் இரவு 9 மணிக்கே வீடுகளுக்குச் சென்று சேர்ந்தனர். 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024