Monday, December 25, 2017

ஆங்கிலம் அறிவோமே 191: ஆட்டுக்குட்டி எப்படிக் குழந்தை ஆனது?

Published : 19 Dec 2017 10:33 IST
Updated : 19 Dec 2017 10:33 IST

ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

‘சிகப்பு ரோஜாக்கள்’ திரைப்படத்தில் கமலஹாசன் ஏற்று நடித்த திலிப் கதாபாத்திரம், மனநிலைக் கோளாறு காரணமாகப் பல பெண்களைக் கொலை செய்யும். அவரை ஒரு சைக்கோ என்பார்கள். சைக்கோ என்றால் புத்தி சுவாதீனமற்ற கொடூரமானவனா? அப்படியானால் சைக்காலஜி என்பது அப்படிப்பட்டவர்களைக் குணப்படுத்தும் மருத்துவமா?

***********

Point black என்பதற்கும், வில்வித்தைப் பயிற்சிக்கும் என்ன தொடர்பு என்கிறார் ஒரு வாசகர்.

நண்பரே அது point black அல்ல (சொல்லப்போனால் அது பெரும்பாலும் வெள்ளை) point blank. பிரெஞ்சு மொழியில் ‘blanc’ என்றால் வெள்ளைக் குறி என்று அர்த்தம்.

வில்வித்தைப் பயிற்சியில் அம்பு சேர வேண்டிய மைய இடம்தான் Point blank . மிக அருகில் நின்றுகொண்டு இப்படிக் குறிபார்க்கும்போது வில்லின் கோணத்தை ஏறவோ இறக்கவோ செய்யாமல் நேரடியாகக் குறிபார்த்தால் போதுமானது.

இப்போதெல்லாம் ஒரு விஷயத்தை நேரடியாகப் போட்டு உடைப்பதை (straight talking) point blank என்கிறார்கள்.




Child என்பதும் Kid என்பதும் ஒன்றுதானா?

16-ம் நூற்றாண்டுவரை Kid என்ற வார்த்தை ஆட்டுக் குட்டியைக் குறிக்கத்தான் பயன்பட்டது. மெல்ல மெல்ல அது மறைந்து மனிதக் குட்டிகளையும் (குழந்தைகளை) குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Kids என்பது சில நேரம் மட்டம்தட்டவும் பயன்படுத்தப்படுகிறது. உடல் வளர்ந்தும் மனதளவில் பக்குவப்படாதவர்களை Kids என்று குறிப்பிடுவதுண்டு.

Kids’ stuff என்றால் மிக எளிமையாகச் செய்யக்கூடிய ஒன்று என்று அர்த்தம்.

Verb ஆகப் பயன்படுத்தப்படும்போது அற்பமாக நடந்துகொள்வது, கிண்டலடிப்பது போன்ற பொருள்களில் இது பயன்படுத்தப்படுகிறது. Beware just kidding around.

ஒன்றை சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதைக் குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. I am ready for another marriage (just kidding).

***********

கேட்டாரே ஒரு கேள்வி இம்முறை கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கிறது. காரணம் கொஞ்சம் உண்மையும் நிறைய தவறான புரிதலும் கலப்பது ஆபத்தானது இல்லையா?

‘சைக்’ (Psyche) என்பது மனதைக் குறிக்கிறது. சைக்காலஜி (Psychology) என்பது மனம் தொடர்பான கல்வி. மனநலம்.

சைகியாட்ரி (Psychiatry) என்பது மனம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு மருத்துவப் பிரிவு.

சைக்கோ (Psycho) என்பது மனநலம் பிறழ்ந்ததன் காரணமாக குரூர சிந்தனை வயப்பட்ட ஒருவரைக் குறிக்கிறது. சைக்கோ என்பது முன்னொட்டாக (prefix) பயன்படுத்தப்படும்போது ‘மனம் தொடர்பான’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக Psycho Pharmacology என்பது மனநலப் பாதிப்புக்கான மருந்துகள் குறித்த கல்வி.

***********

“Accessories என்று பெண்கள் பேச்சில் இடம்பெறும் வார்த்தைக்கு என்ன பொருள்?”

வாசகரே ஒருவேளை நீங்கள் இதுபோன்ற ஒரு வாக்கியத்தைக் கேட்டிருக்கலாம். “I found a lovely dress for the function but I need to find some matching accessories”.

உடைக்குப் பொருத்தமான கைப்பை, காதணி, சங்கிலி, காலணி போன்றவற்றை accessories என்போம். Accessories என்பதைத் தோராயமாக அணிகலன்கள் எனலாம்.

அதாவது ஒன்றை அதிகப் பயனுள்ளதாகவோ அதிக அழகானதாகவோ ஆக்குவதற்காக இணைக்கப்படும் பிற பொருளை accessories என்பார்கள்.

ஆனால், சட்டத்தின் பார்வை வேறு. Accessory என்றால் ஒரு குற்றம் நடக்கத் துணையாக இருப்பவர். அதாவது, நேரடியாக ஒரு குற்றத்தில் ஈடுபடாமல் அந்தக் குற்றம் நடக்க தூண்டுபவர் அல்லது துணை நிற்பவரைச் சட்டம் accessory என்று அழைக்கிறது.

ஒரு இயந்திரம் அல்லது கருவியைச் சரியாக இயக்குவதற்காக அதில் சேர்க்கப்படும் அதிகப்படி விஷயங்களையும் accessory எனக் குறிப்பிடுவதுண்டு. Accessories for a premium car include electric windows and a sunroof.

***********

“I am providing my best to my children” என்று நான் குறிப்பிட்டேன். வீட்டுக்கு வந்திருந்த, நான் பெரிதும் மதிக்கும் ஒருவர், “You are providing the best to your children” என்றார். My best என்பதற்கும் the best என்பதற்கும் வித்தியாசம் உண்டா?

“என்னாலே அதிகபட்சம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் நான் என் குழந்தைகளுக்காகச் செய்கிறேன்” என்பது நீங்கள் கூறியதற்குப் பொருள்.

“மிக அதிகபட்சமாக ஒருவர் தன் குழந்தைகளுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவையும் நீங்கள் செய்கிறீர்கள்” என்பது வந்திருந்தவர் கூறியதற்குப் பொருள்.

நீங்கள் அவரை மதிப்பதுபோலவே அவரும் உங்களை மதிக்கிறார். பாராட்டுகிறார். உங்களை நீங்கள் அளவீடாகக் கொள்கிறீர்கள். அவர் இந்த விஷயத்தில் மற்றவர்களையும் ஒப்பிட்டு உங்களை மிக உயர்வாகக் குறிப்பிடுகிறார்.

தொடக்கம் இப்படித்தான்

“From Pillar to Post” என்பதற்குப் பொருள் எல்லா இடத்திலும் என்று வைத்துக்கொள்ளலாமா, எதற்காக இதை உணர்த்த pillar, post ஆகிய இரு வார்த்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன?

Pillar to post என்பது ஓரிடத்தில் தங்காமல் பல இடங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதைக் குறிக்கிறது. முக்கியமாக எந்தவொரு பயனும் கிடைக்காத அலைச்சல். He was driven from pillar to post because he opposed the local leader.

இங்கிலாந்தில் ஒரு காலத்தில் pillary மற்றும் wihipping post ஆகிய இரண்டும் இருந்தன.

ஏமாற்று வேலை செய்த வணிகர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளை pillory என்ற இடத்தில் வைத்து அவர்கள் கைகளையும் தலைப் பகுதியையும் கட்டிவிடுவார்கள். அங்கு வரும் மக்கள் அவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார்கள்.

செய்த குற்றம் பெரிதாக இருந்தால் அவர்கள் pillory என்ற இடத்திலிருந்து whipping post பகுதிக்கு இழுத்துச் செல்லப்படுவார்கள். அங்கே பொதுமக்கள் அவர்களைச் சவுக்கால் அடிப்பதுண்டு.

இப்படித்தான் Pillar to Post உருவானது.
சிப்ஸ்

Wear என்றால்?

Ware என்றால்?

Wear என்றால் உடுத்துவது அல்லது அணிவது. Ware என்றால் விற்பதற்காகத் தயாரிக்கப்படும் பொருள் எனலாம்.

Enemity என்றால்

முன்விரோதமா, பகைமையா?

இரண்டும்தான். Enemy என்பதில் ‘என்’னின் இருபுறமும் ஈக்கள் உண்டு. ஆனால், Enmity-ல் ஒரு ‘e’தான் என்பதைக் கவனியுங்கள்.

Hurled என்ற வார்த்தை

நாளிதழ்களில் தொடர்ந்து இடம்பெறுகிறது. இது எதைக்

குறிக்கிறது?

நாட்டில் சகிப்புத்தன்மையும் கட்டுப்பாடும் இல்லாமல் போனதைக் குறிக்கிறது! Hurl என்றால் விசையுடன் ஒன்றைத் தூக்கி எறிவது நாளிதழில் hurled என்பதன் கூடவே ‘கல்’ அல்லது ‘காலணி’ என்ற வார்த்தையும் இடம்பெற்றிருக்குமே!

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024