இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம்: 30 வட்டாட்சியர்கள் ஆஜர்
By DIN |
Published on : 23rd December 2017 02:34 AM
மருத்துவ மாணவர் சேர்க்கையில்
வெளிமாநில மாணவர்களுக்கு இரட்டை இருப்பிடச் சான்றிதழ் வழங்கியதாகத்
தொடரப்பட்ட வழக்கில் 30 வட்டாட்சியர்கள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த விக்நயா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'மருத்துவ இடங்களைப் பெற வெளி மாநில மாணவர்கள் இரட்டை இருப்பிடச் சான்றிதழைக் கொடுத்துள்ளனர். எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இருப்பிடச் சான்று வழங்கிய வட்டாட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருப்பிடச் சான்று வழங்கிய 30 வட்டாட்சியர்களும் நேரில் ஆஜராகினர். ஆவணங்களை முறையாகச் சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு சான்று
வழங்கியதாக வட்டாட்சியர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் ஜன. 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment