Sunday, December 10, 2017

35 ஆண்டுகளாக ஓய்வூதியத்துக்காக போராடிய தியாகி: 2 மாதங்களுக்குள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published on : 10th December 2017 02:26 AM |

ஊழலுக்கு எதிரான அடுத்த சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளதை மத்திய- மாநில அரசுகள் உணர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேச விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் தனது 14 வயதில் சேர்ந்தவர் முனுசாமி. 


பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவரை கைது செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் ரங்கூன் சிறையில் வைத்துள்ளது. அதன்பின்னர் 1950-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பினார்.


தியாகிகளுக்கான ஓய்வூதியம் கோரி கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளை அணுகிய அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. 


இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை, 14 வயதில் ராணுவத்தில் சேர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறி அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இதனை எதிர்த்து முனுசாமி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆவணங்களைப் பார்க்கும் போது அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே தகுதி பெற்ற நாளில் இருந்து இதுவரை அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத் தொகையை இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும். இனிவரும் நாள்களில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஊழலுக்கு எதிரான அடுத்த சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். மேலும் தேச விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024