Wednesday, December 13, 2017

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு: 6 பேருக்கு தூக்கு தண்டனை



உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு திருப்பூர் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.

டிசம்பர் 13, 2017, 05:45 AM
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 22). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யா(20) என்பவர் 2-ம் ஆண்டு படித்தார்.
ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்றபோது சங்கருக்கும், கவுசல்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 12-7-2015 அன்று சங்கரும், கவுசல்யாவும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கவுசல்யா கல்லூரிக்கு செல்லாமல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி சங்கரும், கவுசல்யாவும் உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தின் முன்பு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கூலிப்படை கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் கவுசல்யா வீடு திரும்பினார். இந்த சாதி ஆணவக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (45), தாய் அன்னலட்சுமி (40), தாய் மாமா பாண்டித்துரை(49), கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன்(31), மணிகண்டன்(25), செல்வக்குமார்(25), கலை தமிழ்வாணன்(24), தன்ராஜ்(23), மதன் என்கிற மைக்கேல்(25), கல்லூரி மாணவரான பிரசன்னகுமார்(19), மணிகண்டன் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

உடுமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
பின்னர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் டிசம்பர் மாதம் 12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கோவை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கவுசல்யாவின் தாய் மாமா பாண்டித்துரையை திருச்சி சிறையில் இருந்து அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் மதியம் 12 மணிக்கு சங்கர் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக சங்கரநாராயணன் தலைமையில் மேலும் 3 அரசு வக்கீல்கள் ஆஜரானார்கள். குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வழக்கு குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேரிடமும் கேட்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டனர்.

ஆனால் இந்த வழக்குக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படக்கூடாது என்று அரசு வக்கீல் சங்கரநாராயணன் தனது தரப்பு வாதத்தை வைத்தார்.
ஆனால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மேலும் ஒரு மகன் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

மதியம் 12.30 மணி வரை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து தண்டனை விவரம் 1.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்து ஒத்திவைத்தார். மீண்டும் மதியம் 1.30 மணிக்கு மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் ஒவ்வொருவருக்குமான தண்டனைகள் குறித்து அவர் தீர்ப்பு கூறினார்.

அதன்படி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையாக செயல்பட்ட ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

தன்ராஜூக்கு சாகும் வரை வெளியே வர முடியாத வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், கூலிப்படையினருக்கு அடைக்கலம் கொடுத்த பட்டி வீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் சின்னசாமிக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.1 லட்சம் அரசுக்கும், மீதம் உள்ள ரூ.2 லட்சத்தில் ரூ.1 லட்சத்தை கவுசல்யாவுக்கும், ரூ.1 லட்சத்தை சங்கரின் தந்தை வேலுசாமிக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும். அதுபோல் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதில் தலா ரூ.5 ஆயிரம் அரசுக்கும், தலா ரூ.1½ லட்சத்தை கவுசல்யாவுக்கும், வேலுசாமிக்கும் சரிபாதியாக இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய் மாமா பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரின் குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பை தொடர்ந்து 8 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...