Tuesday, December 19, 2017

தலையங்கம்
மோடிக்கு கிடைத்த இரட்டை வெற்றி

குஜராத்தில் 6–வது முறையாகவும், இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்தும் பா.ஜ.க. வெற்றிவாகை சூடியுள்ளது.

டிசம்பர் 19 2017, 03:30 AM

ஒட்டுமொத்த இந்தியாவும் குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தது. ரூபாய்நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டபிறகும், சரக்கு சேவைவரி அமலுக்கு வந்தபிறகும் நடந்த தேர்தல்கள் என்பதால், மக்களின் தீர்ப்பு எப்படி இருக்குமோ? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குஜராத்தில் பட்டேல் இனத்தவரின் இளம்தலைவரான ஹர்திக் பட்டேல், தலித் தலைவரான ஜிக்னேஷ்மேவானி, இதரபிற்படுத்தப்பட்டோர் இனங்களின் தலைவரான அல்பேஷ்தாக்கோர் ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்ததால், காங்கிரஸ் வெற்றிபெறவும் வாய்ப்பு இருக்கிறதோ? என்ற கருத்தும் அரசியல் உலகில் நிலவியது. மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இருந்தன. பா.ஜ.க. தேர்தல்அறிக்கையில் வளர்ச்சி, நலத்திட்டங்கள் தொடரும் என்று மட்டும் இருந்தது.


குஜராத் மாநில தேர்தலில் 2012–ல் 115 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., இப்போது அந்த இடங்களைவிட குறைவானஇடங்களில் வெற்றிபெற்றாலும் ஆட்சியை இழக்கவில்லை. 61 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அணி முன்பைவிட கூடுதலான இடங்களை பெற்றுள்ளது. இமாசலபிரதேசத்தில் 2012–ல் 26 இடங்களை மட்டும் பெற்றிருந்த பா.ஜ.க., இப்போது 40–க்கும் மேற்பட்ட இடங்களிலும், 36 இடங்களில் வெற்றிபெற்று 2012–ல் ஆட்சியைப்பிடித்த காங்கிரஸ், தற்போது ஏறத்தாழ 20 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இருமாநிலங்களிலும் மோடியின் அலையால் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. 22 ஆண்டுகளாக ஆட்சிசெய்த குஜராத்தில் 6–வது முறையாகவும், இமாசலபிரதேசத்தில் காங்கிரசிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்தும் பா.ஜ.க. வெற்றிவாகை சூடியுள்ளது. நிச்சயமாக இந்தவெற்றி பா.ஜ.க.வுக்கு உற்சாகத்தை அளிக்கும் என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கையை இழக்கும் தோல்வி இல்லை. தோல்வியிலும் வெற்றிதான்.


பா.ஜ.க., காங்கிரஸ் இருகட்சிகளுமே தங்களை சுயபரிசோதனை செய்யவேண்டிய கட்டாயம் இந்ததேர்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க. தனியாகவும், கூட்டணிகட்சிகளோடு சேர்ந்தும் 18 மாநிலங்களில் ஆட்சி நடத்திவருகிறது. இப்போது கிடைத்த வெற்றியினால் மொத்தமுள்ள 29 மாநிலங்களில், 19 மாநிலங்களில் பா.ஜ.க.வின் கொடிபறக்கும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில், 5 மாநிலங்களிலிருந்து ஒரு மாநிலத்தை இழந்து 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சிநிலவும். அடுத்து 2018–ம் ஆண்டில் சத்தீஷ்கர், கர்நாடகம், மத்தியபிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவேண்டிய நிலையிருக்கிறது. 2019–ல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறது. இருகட்சிகளின் இலக்குமே, இதைநோக்கித்தான் இருக்கும். இந்ததேர்தல் ஒருபாடத்தை காட்டியிருக்கிறது. மக்கள் இலவசங்கள், மானியங்களைவிட வளர்ச்சியை அதிகம் விரும்புகிறார்கள். பொதுவாக ஆளும்கட்சி மீது சலிப்பு ஏற்பட்டு, எதிர்க்கட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்ற உணர்வு எப்போதும் வாக்காளர்களுக்கு இருக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. மக்கள் விரும்பும் ஆட்சியை நடத்தினால் எத்தனை ஆண்டுகளானாலும் அந்தநிலை ஏற்படாது என்பதை குஜராத் தேர்தல் முடிவு காட்டிவிட்டது.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...