Monday, December 11, 2017

சரக்கு ரயிலுக்கு முக்கியத்துவம் : பயணியர் கடும் அதிருப்தி

Added : டிச 11, 2017 00:37

சரக்கு ரயிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், காரைக்கால் - திருச்சி பயணியர் ரயில், தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் குறை கூறுகின்றனர்.

காரைக்கால், நாகூர், நாகை, திருவாரூர் ஆகிய நகரங்களில் இருந்து, கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் கோவைக்கு, தொழில் ரீதியாகவும், வேலைக்காகவும், தினமும் அதிகம் பேர் செல்கின்றனர். இவர்கள், காரைக்காலில் இருந்து, திருச்சிக்கு இயக்கப்படும் பயணியர் ரயிலில், தஞ்சாவூர் சென்று, அங்கிருந்து, கோவை செல்லும், ஜன சதாப்தி ரயிலில் பயணம் செய்வது வழக்கம். காரைக்கால் - தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில், காரைக்காலில், நண்பகல், 12:30 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு, மாலை, 3:35 மணிக்கு சென்றடைகிறது. 


மயிலாடுதுறையில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், தஞ்சையில், இருந்து, 3:45 மணிக்கு புறப்படுகிறது. பயணியர் ரயில், 10 நிமிடம் முன்னதாக, தஞ்சாவூர் நிலையம் செல்வதால், இப்பயணியர், கோவை ரயிலை பிடித்து, பயணம் செய்ய வசதியாக உள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, தஞ்சாவூருக்கு வழியாக, சரக்கு ரயில் போக்குவரத்து அதிகம் உள்ளது. வருவாய்கருதி, சரக்கு ரயில்களை தாமதமின்றி இயக்கு ரயில்வே நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. இதனால், காரைக்கால் - திருச்சி பயணியர் ரயில், நாகை ரயில் நிலையத்தில், பல நாட்களில், 30 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. தஞ்சாவூருக்கு தாமதமாக செல்வதால், ஜன சதாப்தி ரயிலை பிடிக்க முடியாமல், பயணியர் தவிக்கும் நிலை தொடர்கிறது. 'பயணியர் ரயிலை தாமதமின்றி இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், ரயில் மறியல் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்' என, பயணியர் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024