Sunday, December 24, 2017

ஆர்.கே.நகர் தேர்தல்- செல்வாக்கை இழந்த இரட்டை இலை... பதவியை பறிகொடுக்கிறாரா எடப்பாடி?

தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனின்  வெற்றி  தமிழக அரசியல் அத்தியாயத்தை புதிய பாதையை  நோக்கி நகர்த்திச் செல்கிறது” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி கையில் வைத்திருந்தபோதும், பன்னீர் செல்வத்தின் போர்க்கொடியால் இரட்டை இலை சின்னமும், கட்சியும் தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டது. ஆட்சியையும், கட்சியையும் தன்வயப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட எடப்பாடி வலியச்சென்று பன்னீரோடு இணைப்பு நடத்தினார். அந்த இணைப்பே அ.தி.மு.க வின் அடிநாதமாக விளங்கிய இரட்டை இலையைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானதாக இருந்தது.

இரட்டை இலையை பெற்றுவிட்டால் ஒரு கோடிக்கும் மேலான தொண்டர்களையும், நாற்பது ஆண்டு காலம் தமிழகத்தில் கோலோச்சி வரும் அ.தி.மு.க. என்ற இயக்கத்தையும் தன் வயப்படுத்தி விடலாம் என்ற கணக்கே எடப்பாடியிடம் ஓங்கி இருந்தது. அதற்காகவே மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசிடம் மடிப்பிச்சை கேட்காத குறையாக எடப்பாடி மண்டியிடவும் செய்தார். ஒருபக்கம் எடப்பாடி, கட்சியைக் கைப்பற்ற காய்நகர்த்தி வர, மறுபுறம் பவ்யமாக பன்னீரும் மத்திய அரசின் துணையோடு கட்சியைக் கைப்பற்றக் கணக்கு போட்டார். ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசோ  இரண்டு பேரையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு தமிழகத்தின் ஆட்சி அதி்காரத்தை  ஆட்டுவிக்க கணக்குப் போட்டது.

தினகரன் தரப்போ,கட்சியை  கைப்பற்ற ஒருபுறம் வியூகம் வகுத்து வந்தாலும், தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும்  பணியையும் மற்றொருபுறம் மேற்கொண்டே வந்தது. ஆனால், எடப்பாடி தரப்போ இரட்டை இலை வந்துவிட்டால் எல்லாம் தங்கள் வசம் வந்துவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையிலேயே இருந்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையோடு களத்தில் இறங்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்தனர் எடப்பாடி- பன்னீர் தரப்பினர். மத்திய அரசிடமும் இதை சூசகமாகத் தெரிவித்தனர். அதன் விளைவுதான்,இரட்டை இலையை எடப்பாடிவசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்த மறுதினமே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பும் வெளிவந்தது. கட்சியும், சின்னமும் தங்கள் வசம் வந்துவிட்டதால், ஆர்.கே. நகரில் வெற்றி நமக்குத்தான் என்று எடப்பாடி அணியினர் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.
ஆனால், அதன்பிறகுதான் தினகரன் தரப்பு விஸ்வரூபமாக களத்தில் இறங்கியது. கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை என்ற நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் துணிச்சலாகக் களத்தில் இறங்க முடிவுசெய்தார்.தினகரன் தன் மீது உள்ள நம்பிக்கை ஒரு புறம் என்றால், மறுபுறம் எடப்பாடி தரப்புக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையும் உணர்ந்துதான் இந்த துணிச்சலான முடிவை எடுத்தார். அ.தி.மு.க வை விட ஒரு வாக்காவது கூடுதலாக வாங்கிவிட்டால் போதும் என்ற  கணக்கில்தான் ஆரம்பத்தில் களத்தில் இறங்கினார். ஆனால், ஆர்.கே.நகரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு வெற்றியை எளி்தாக்கிவிட்டது.
இந்த தேர்தல் முடிவு  தினகரனுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதை விட இத்தனை ஆண்டுகள் அ.தி.மு.க வுக்கு வலிமை சேர்த்து வந்த இரட்டை இலை தனது செல்வாக்கை இழந்துவிட்டதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை இலை சின்னம் கிடைத்தால், எதையும் சாதித்துவிடலாம் என்ற எடப்பாடியின் எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டது ஆர்.கே. நகர் முடிவு. இத்தனை ஆண்டுகள் கோலோச்சி வந்த இரட்டை இலை சின்னத்தை நேற்று வந்த குக்கர் சின்னம் காலி செய்துவிட்டது என்ற செய்தியும் கொஞ்சம் அதிர்ச்சிகரமானதுதான். ஆனால், இதைத் தான் தினகரன் எதிர்பார்த்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் வலிமைபெற்றுவிட்டால், கட்சியை தன்வயப்படுத்திவிடலாம் என்ற திட்டத்தில் அவர் தெளிவாக இருந்தார். இதையெல்லாம் உணர்ந்து தான், எடப்பாடி தரப்பும் வாக்குக்கு ஆறாயிரம் ரூபாய் பணத்தை வாரி இறைத்ததாக தகவல்கள் வெளியாகின.

தினகரனின் இந்த வெற்றி அ.தி.மு.க  என்ற இயக்கம் இனி யார்வசம் செல்லப்போகிறது என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்பியுள்ளது. இரட்டை இலை இருக்கும் பக்கம் தான் தொண்டர்கள் இருப்பார்கள் என்றால், இப்போது இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்த மக்களின் மனநிலை எதை பிரதிபலிக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது?. சின்னம் யார் வசம் இருக்கிறது, கட்சி யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் பார்க்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது. இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க வின் நிர்வாகிககள் மத்தியிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக “சின்னம் எடப்பாடி அணியிடம் இருந்ததால் அவர் பின்னால் சென்றோம்” என்று சொன்னவர்களின் மனநிலையிலும் இனி மாற்றம் ஏற்படலாம்.

ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் என்று தினகரன் இத்தனை நாட்கள் சொல்லிவந்தார். இந்த ஸ்லீப்பர் செல்லாக இருப்பவர்கள் இனி உண்மையாகவே தினகரன் பின்னால் நிற்கலாம்.சட்டமன்ற கூட்டத்தொடரை அடுத்த மாதம் கூட்டவேண்டிய நிலையில் சட்டமன்ற உறுப்பினராக தினகரன் உள்ளே செல்லும் போது, அவர் பின்னால் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுக்கும் நிலையை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட முதல்வராக எடப்பாடி எதிர்காலத்தில் தொடருவதில் கூட சிக்கலை ஏற்படுத்திவிடலாம். தினகரனின் இந்த வெற்றி  எடப்பாடி பின்னால் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது.இதனால்,தமிழக அரசியல் புதிய பாதையில் வரும் காலத்தில் பயணிக்கும் என்பதை கணிக்க துவங்கிவிட்டார்கள் அரசியல் நோக்கர்கள். தினகரனின் வெற்றிக்கு பின்னால், மறைமுகமாக சில அமைச்சர்களே பணியாற்றினார்கள் என்ற தகவலை லேட்டாக தான் அறிந்து கொண்டுள்ளார் எடப்பாடி. தினகரனின் இந்த வெற்றி ஆட்சி கட்சி இரண்டையும் தினகரன் கைப்பற்றுவதற்குக்  கிடைத்த வெற்றியாக  அவரின்  ஆதரவாளர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். “இனி, எடப்பாடி பக்கம் இருந்து தினகரன் பக்கம் அணிமாறும் படலத்தை காணப்போகிறீர்கள்” என்று வெற்றி உற்சாகத்தில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.
ஆட்சியை கச்சிதமாக நகர்த்தி, கட்சியையும் லாவகமாக கைப்பற்ற தெரிந்த எடப்பாடிக்கு ஆர்.கே. நகரில் காய்நகரத்த தெரியாமல் போனதால், எதிர்காலத்தில் ஆட்சி, கட்சி என்ற இரண்டையுமே அவர் இழக்கும் அபாயத்திற்கு சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...