Monday, December 25, 2017

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்” மு.க.ஸ்டாலின் அறிக்கை
 
“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம் தான்”, என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். 
 
சென்னை,

இதுகுறித்து தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1967-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. அதற்குமுன், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து முடிந்த உடன் தர்மபுரியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றியைப் பறி கொடுக்க நேர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், பத்திரிகையாளர்கள் ‘தர்மபுரி இடைத்தேர்தல் வெற்றி குறித்து என்ன கருதுகிறீர்கள்?’, என்று கேட்டனர். உடனே, ‘தர்மபுரியில் வாக்காளர்களுக்கு கொடுத்த தர்மம் வென்றது’, என குறிப்பிட்டார்.

அதேபோல இன்று ஆர்.கே.நகர் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட ‘தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்’ வென்றுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி, தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்கு 24 ஆயிரத்து 651 வாக்காளர்கள், தங்களின் விலைமதிக்க முடியாத வாக்குகளை அளித்திருப்பது நேர்மையான, உயிரோட்டமுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீது, இன்றைய சூழலிலும் அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்குத் துணைநின்று, ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பண மழையிலிருந்து ஜனநாயகத்தை, எப்படிப்பட்ட சவாலாக இருந்தாலும் அதனை சந்தித்துப் போராடிப் பாதுகாத்திட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தி.மு.க. சந்தித்தது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் தொடங்கி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவது வரை பல முனைகளிலும் தேர்தல் ஆணையத்தின் சட்டப்படியான உதவியையும், முறையான கண்காணிப்பையும் நாடினோம். தேர்தல் ஆணையம் அலட்சியம் காட்டியபோது, ஐகோர்ட்டு சென்று போராடினோம்.

ரூபாய் நோட்டுகள் குத்தீட்டிபோல் தேர்தல் ஜனநாயகத்தின் மார்பில் ஊடுருவி உயிருக்கே உலை வைத்துக்கொண்டிருந்த நேரத்தில், தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாராமுகமாக இருந்ததே தவிர, பண வினியோகத்தைத் தடுக்கவில்லை. சுதந்திரமான தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம், காவல்துறை மற்றும் அதிகார எந்திரமும் துரும்பைக்கூட எடுத்துப்போட முயற்சிக்கவில்லை. இதற்குமுன் நடைபெற்ற எந்த இடைத்தேர்தலிலும் இப்படியொரு கரும்புள்ளியை தேர்தல் ஆணையம் தனக்குத்தானே திலகம் என நினைத்து இட்டுக்கொண்டது இல்லை நடுநிலையாளர்கள் கருதும் அளவுக்கு தேர்தல் ஆணையம் பரிதாபமாக நின்றதைக் காணமுடிந்தது.

தேர்தல் பார்வையாளர்கள் வந்தார்கள், சென்றார்கள்; அவ்வளவுதான். சுதந்தி ரமாகத் தேர்தலை நடத்துவதற்கு இரும்புக்கரம் கொண்டு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவிட்டும்கூட, ஹவாலா பாணியில் வாக்குப்பதிவு தினத்தன்று கூட வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும், போலீசாரும் கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்குத் தோல்வி என்பதைவிட, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ள இமாலய தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலைமை, மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுமா? என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...