Friday, December 15, 2017

கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வங்கி கணக்கில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் ரூ. 44 லட்சம் கையாடல்: மோசடி நபர் தலைமறைவு

Published : 15 Dec 2017 09:16 IST

கடலூர்



கடலூர் மாவட்டத்தில் இருந்து ஸ்வைப்பிங் மிஷின் மூலம் சென்னை தனியார் வங்கி தலைமை அலுவலக கணக்கில் இருந்து ரூ.44 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. பணம் கையாடல் செய்து தலைமறைவான நபரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் கணேசமூர்த்தி(40). மாற்றுத்திறனாளி. இவர் ஸ்வைப் பிங் மெஷின் பெற்று, வீட்டில் வைத்துக் கொண்டு ஏடிஎம் கார்டை எடுத்து வருபவர்களுக்கு மெஷினில் ஸ்வைப் செய்து பணம் தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்பகுதியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் கிராமத்தினர் உள்ளிட்ட சிலர் இதனை பயன்படுத்தி வந்துள்ளனர்.


சென்னை வங்கியில் பணம் மோசடி

இதற்காக எடுக்கும் பணத்துக்கு தகுந்தாற் போல கமிஷன் தொகையை கணேசமூர்த்தி பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஏடிஎம் பராமரிப்பு கணக்கில் ரூ.44 லட்சத்து 74 ஆயிரம் பணம் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரையில் இந்த பண மோசடி நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த வங்கி உயர் அதிகாரிகள் இந்த பணம் யாருடைய கணக்குக்கு சென்றுள்ளது என்று ஆய்வு செய்தனர். இதில் ஆர்பிஎல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுக்கு பணம் சென்று அதில் இருந்து கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி கணக்குக்கு பணம் சென்றிருப்பது தெரியவந்தது.

வங்கி ஊழியர்கள் உடந்தையா?

இதையடுத்து லட்சமி விலாஸ் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவு நத்தமேடு லட்சுமி விலாஸ் வங்கி கிளையின் மேலாளர் திருவேங்கடம், கடலூர் மாவட்டம் மருதூர் காவல்நிலையத்தில் கணேசமூர்த்தி மீது பணமோசடி புகார் அளித்தார். அதில், ரூ. 44 லட்சத்து 74 ஆயிரம் வங்கி பணத்தை எடுத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கியில் உள்ளவர்கள் உதவி இல்லாமல் இந்த கையாடல் நடைபெற்றிருக்க முடியாது எனவும், இது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள மோசடி என்றும் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள கணேசமூர்த்தியை போலீஸார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024