Friday, December 8, 2017

எம்.ஜி.ஆர் சந்தித்த நேர்மையான போலீஸ்!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 30th November 2017 05:02 PM |




சில பிரபலங்களுக்குத் தங்களை மதிக்காத, ஒரு பொருட்டாகக் கருதாத சாமானியர்களைக் கண்டால் அத்தனை பிடிப்பதில்லை. சாமானியர்கள் என்றாலே பிரபலங்களைக் கண்டதும் உன்னைப்பிடி, என்னைப்பிடி என போட்டி போட்டிக் கொண்டு பறந்து வந்து மேலே விழுந்து புரளாத குறையாக இணைந்து ஃபோட்டோ எடுக்கவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் மட்டுமே பிறவி எடுத்த ஜென்மங்கள் எனக்கருதக் கூடிய மகானுபாவர்கள் திரையுலகிலும், அரசியல் களத்திலும் சிலர் உண்டு. அதிலும் எம்ஜிஆரைக் கண்டால் அவருக்கிருந்த புகழுக்கு அன்று அவரை ஒருமுறை நேரில் கண்டு விட மாட்டோமா? அவர் பார்வை வளையத்துக்குள் விழுந்து விட மாட்டோமா? அவருடன் ஒரு வார்த்தை பேசி விட மாட்டோமா? என்று தவித்தவர்களும், துடித்தவர்களும் அனேகர் இருந்த அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆரை ஒரு பொருட்டாகக் கருதாது, தான் செய்யும் தொழிலே தனக்கு தெய்வம் எனக் கருதி அவருடன் ஒருமுறை பயணிக்க வாய்த்த ஒரு சிறந்த போலீஸ்காரரைப் பற்றி இன்று காணலாம்.

ஒரு கார்த்திகை மாத கருக்கிருட்டு! செங்கல்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு எம்.ஜி.ஆர் நடுநிசி 12 மணி வாக்கில் காரில் வந்து கொண்டிருந்தார்.

கண்விழித்தவாறே எம்.ஜி.ஆர் வந்து கொண்டிருந்தபொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். எம்.ஜி.ஆரின் கார் அவரைக் கடந்து செல்கின்ற போது ஆள் நடமாட்டமே இல்லாத அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸுக்காக காத்து நிற்பதைப் புரிந்து கொள்கிறார்.

உடனே டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும், என்கிறார்.

பரவாயில்லை நான் பஸ்ஸிலேயே வந்துவிடுகிறேன், என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.

நேரம் ஆகிவிட்டது இந்த ரூட்டில் இனி பஸ் கிடையாது, ஏறிக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆர் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.

லைட்டைப் போட்டு ”சாப்பிட்டீங்களா? என்று கேட்டுக் கொண்டே சீட்டுக்குப் பின்னால் இருந்த பிஸ்கட் பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.

‘இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன்பாடில்லை. என்னை உண்ணச் சொல்லி வேறு இழிவு படுத்தாதீர்கள்’ என்று போலீஸ்காரர் மறுக்கிறார். இந்த சாதாரண போலீஸ்காரரின் நேர்மை எம்.ஜி.ஆரை சிலிர்க்க வைத்துவிட்டது.

அரை மணிநேரம் கார் சென்று கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரைப் பற்றி போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே எம்.ஜி.ஆருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதை கூடுதலாகியது.

‘நான் எம்.ஜி.ஆர்’

‘கேள்விபட்டிருக்கிறேன்.’

எம்.ஜி.ஆருக்கு ஆச்சர்யம்.

‘என் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?’

‘நான் சினிமாவே பார்ப்பதில்லை.’ (கார் சப்தம் தவிர வேறு சப்தம் இல்லை.)

போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச் சொல்லி ‘இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்’ என்கிறார்.

‘ஏன்? நீங்கள் குறிப்பிட்ட விலாசம் இன்னும் அரை கிலோமீட்டர் தூரம் இருக்கிறதே?’

‘சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் இறங்கினால், என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக் கொள்வார்கள். இதுவரை நான் யார் காரிலும் ஓசியில் பயணம் செய்ததில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் உதவி செய்ததற்கு நன்றி‘ என்கிறார்.

எம்.ஜி.ஆர் அவர் எந்த ஸ்டேசனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுக் கொண்டு கிளம்புகிறார்.

அடுத்த நாள் செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து நான் எம்.ஜி.ஆர் பேசுகிறேன் என்கிறார். இரவு சந்தித்த போலீஸ் பற்றி விசாரிக்கிறார்.

டி.எஸ்.பி சொல்கிறார், நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்கதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே, இலக்கணம், வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்து, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களைக் கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார் என்ற செய்தி சொல்லப்படுகிறது.

“அவரை என் தோட்டத்திற்கு வரச் சொல்லுங்கள்’ என்கிறார்.

மறுநாள் அந்தப் போலீஸ்காரரை ராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து அவரது பெண்களின் திருமணத்திற்குச் சில உதவிகள் செய்கிறார்.

அது தான் எம்ஜிஆர்!... அவர் தான் எம்ஜிஆர்!

நன்றி: மணவை பொன்.மாணிக்கம்

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...