Tuesday, December 12, 2017

கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : டிச 12, 2017 00:13



சென்னை: சென்னையை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், 4,000 பேர் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. இளைஞர் அணி முன்னாள் செயலர், ஆதி ராஜாராம் ஏற்பாட்டில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், பன்னீர் செல்வம் பேசியதாவது: உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. தமிழகத்தின் முன்னேற்றம், உங்கள் கையில் உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மாணவர்களின் பங்கு தான் முக்கியமாக இருந்தது. அதன் காரணமாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 50 ஆண்டுகளாக, காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாத நிலையை உருவாக்கியது. உங்கள் சக்தி, அ.தி.மு.க., வளர்ச்சிக்கு வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி பேசியதாவது: நாங்கள் எல்லாம், கல்லுாரியில் படிக்கும்போதே, அ.தி.மு.க.,வில் இணைந்தோம். பல ஆண்டுகள் உழைத்து, இந்த நிலைக்கு வந்துள்ளோம். உழைப்புக்கும், விசுவாசத்திற்கும், பதவி கிடைக்கக் கூடிய, ஒரே இயக்கம் இது. வேறு எந்த கட்சியிலும், இது கிடைக்காது. மற்ற கட்சிகளில், வாரிசு அடிப்படையில் தான், பதவி கிடைக்கும். தொழில் அதிபர், மிட்டா மிராசுதாரர்கள் தான், அந்த கட்சிகளில் பதவிக்கு வர முடியும்.சாதாரண தொண்டனும், உயர்ந்த பதவிக்கு வரக்கூடிய கட்சி, அ.தி.மு.க., மட்டுமே. அ.தி.மு.க.,வில் இணைந்து உள்ளதால், உங்களுடைய வருங்காலம் பிரகாசமாக இருக்கும். கட்சிக்கு உழைத்து, விசுவாசமாக இருந்தால், நீங்கள் நினைக்கும் பதவி, உங்களை தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024