Sunday, December 17, 2017

டேட்டா வீணாவதைத் தடுக்கும் "டேட்டா' ஆப்!


ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு

என்று சொல்வார்கள். ஆனால் ஸ்மார்ட் போன்களில் நாம் பயன்படுத்தும் டேட்டாக்களின் அளவு குறித்து யாருக்கும் தெரிவதில்லை. டேட்டாவின் விலை குறைந்தாலும், மாதந்தோறும் டேட்டாவுக்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்பது குறித்து யாருக்கும் தெரிவதில்லை.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண டேட்டாலி (DATALLY) என்ற புதிய ஆண்ட்ராய்டு செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நமது ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகள் பயன்படுத்தும் டேட்டாக்களின் அளவு எவ்வளவு என்பது குறித்தும், நாள்தோறும் எந்த நேரத்தில் எந்த செயலி எவ்வளவு டேட்டாவைப் பயன்படுத்துகிறது என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அருகில் உள்ள "வை-ஃபை' ஹோட்ஸ்பாட்களையும் இந்தச் செயலி காண்பித்துவிடும்.

இந்த "வை-ஃபை' ஹோட்ஸ்பாட்கள் நாம் இருக்கும் இடத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளன என்பதையும் டேட்டாலி காண்பித்துவிடுகிறது. இதனால் வீணாகும் டேட்டாவைச் சேமிக்கலாம்.

பிற செயலிகளைவிட கூகுளின் டேட்டாலி செயலியில் உள்ள தனித்துவம் என்னவென்றால், நாள்தோறும் மணிக்கணக்கில் நமது செயலிகள் பயன்படுத்திய டேட்டாக்களின் அளவைத் துல்லியமாகக் காண்பித்துவிடும். அதுமட்டுமன்றி, டேட்டாலியை ஒரு முறை லாக் செய்து விட்டால்போதும், நமது செல்லிடப்பேசியில் பிற பயன்பாட்டுக்காக டேட்டாவே கசியாது.
டேட்டாலி செயலி 5 எம்பி அளவே கொண்டதால், போன் மெமரியில் அதிக இடத்தைப் பிடிக்காது. டேட்டாலி செயலியைப் பதிவிறக்கம் செய்தவுடன், இன்று நாம் பயன்படுத்திய மொத்த டேட்டாவின் அளவைக் காண்பித்துவிடும். பின்னர் நமது போனில் உள்ள ஆப்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவையும், அதை நிறுத்தி வைக்கவும் உதவும். தேவைப்படும் ஆப்பிற்கு மட்டும் டேட்டாவை திறக்கச் செய்வதே டேட்டாலி ஆப்பின் சிறப்பு அம்சமாகும். பிரீபெய்ட் செல்லிடப் பேசியில் நமது டாக்டைம் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்வதைப்போல் விரைவில் டேட்டாலி ஆப்பிலும் டேட்டா பேலன்ஸ் செக் செய்வது, டேட்டா எப்போது காலியாகும் என்பதைக் காண்பிக்கும் வசதி தொடங்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.






No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024