Wednesday, December 20, 2017

பொறியியல் கல்லூரி, நிகர்நிலைப் பல்கலைகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ புதிய கெடுபிடி! 

ஞா. சக்திவேல் முருகன் Chennai:

கடந்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான சேர்க்கையில், நிகர்நிலை மருத்துவக்கல்லூரிகள் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று 'செக்' வைத்தது உச்சநீதிமன்றம். இதைப்போலவே, இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (All India Coucil for Technical Education) புதிய வழிகாட்டுதல்படி பொறியியல் படிப்புக்கான சேர்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு பொறியியல் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தள்ளப்பட்டுள்ளன.



அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டு இருக்கிறது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறையை தமிழ்நாட்டில் உள்ள 523 பொறியியல் கல்லூரிகளும் 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாகவும், பல்வேறு இடங்களில் வளாகங்களை அமைத்தும் அளவுக்கு அதிகமாக மாணவர்களைச் சேர்த்து வந்தன. இனி, அகில இந்திய தொழில்நுட்பக்குழு அனுமதி வழங்கும் எண்ணிக்கையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். மேலும், ஒவ்வொரு வளாகத்துக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுவின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.

"புதிய வரைமுறையின் அடிப்படையில் ஏற்கெனவே, உள்ள பொறியியல் கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியே அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே கல்லூரி நடத்தி வருபவர்களும் கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்துக்கான அனுமதி, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், பாதுகாப்புக்கான சான்றிதழ், ஆய்வக வசதி, கேன்டீன் மற்றும் தொலைத்தொடர்பு வசதி என அனைத்தையும் முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இதனை எல்லாம் முறையாகப் பெற்றிருப்பவர்களுக்கே அனுமதி கிடைக்கும். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவிதத்துக்கு குறைவாக மாணவர்கள் சேர்க்கையுள்ள படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவது நிறுத்தப்படும். இனி, ஒரே பெயரில் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கும் அனுமதி கிடையாது" என்கிறார் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அதிகாரி.



புதிய வரைமுறையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தன்னிச்சையாக புதிய படிப்புகளை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். இதனையும் ஒரு வரைமுறைக்குள் கொண்டு வரும்வகையில், தொழில்நுட்பக்குழு பரிந்துரைத்த பாடத்திட்டங்கள் 80 சதவிதத்துக்கும் குறைவில்லாத வகையில் பாடங்கள் இருக்க வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் ஒரே ஷிப்ட் முறையில் மட்டுமே வகுப்புகள் சொல்லி கொடுக்க வேண்டும். 80%-க்கு மேல் மாணவர் சேர்க்கை கொண்டுள்ள கல்லூரிகளில் மட்டும் மாலையில் பகுதி நேர வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படும். இதிலும் ஒரு கல்வி நிறுவனத்துக்கு அதிகபட்சம் நான்கு படிப்புகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களின் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டும் பெற வேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஆறாவது சம்பளக்கமிஷன் பரிந்துரைத்த சம்பளம் வழங்க வேண்டும். முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பைச் சொல்லிக்கொடுக்கும் பாடப்பிரிவில் குறைந்தது முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஒருவரும், இரண்டு இணை பேராசிரியர்கள், 6 உதவி பேராசிரியர்களும் பணியாற்ற வேண்டும்.



இளநிலை பொறியியல் படிப்பில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களின் தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். இவர்கள் தங்களுடைய விவரங்களோடு ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். மாணவர்களிடம் கல்வி கட்டணமாக மாநில அரசு பரிந்துரைத்த கட்டணத்தை விடக் கூடுதலாக பெறக்கூடாது என்று புதிய வரைமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது.

புதிய வரைமுறைகள் உடனடியாக அமல்படுத்தி பொறியியல் கல்விக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பதே எல்லோருடயை ஆசை. தரமான பொறியியல் கல்வி வழங்குவதற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு! பாராட்டுவோம்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...