Sunday, December 17, 2017


மார்கழியில்... மகத்தான நாட்கள்! - மறக்காமல் வழிபடுங்கள்!

Published : 16 Dec 2017 17:01 IST

வி.ராம்ஜி



17.12.17 - ஞாயிற்றுக்கிழமை,. அமாவாசை. இந்த நாளில், முன்னோரை வணங்கும் பொருட்டு, தர்ப்பணம் செய்வதும் தானங்கள் வழங்குவதும் விசேஷம். இதேநாளில்... ராமபக்த அனுமனுக்கு ஜயந்தி விழா. வைணவ ஆலயங்களில் உள்ள அனுமன் சந்நிதிகளிலும் தனியே உள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் அமர்க்களப்படும். அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை என நம்மால் முடிந்ததைச் சார்த்தி வழிபடலாம். வெண்பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாம். இந்த நாளில், ஹனுமன் சாலீசா படிப்பதும் கேட்பதும் இன்னும் பலம் தரும். வளம் பெருக்கும்!

18.12.17 திங்கட்கிழமை. முதல்நாள் அமாவாசை இன்றும் தொடர்கிறது. திங்கட்கிழமையாகவும் இருப்பதால், இதை அமாசோமப் பிரதட்சிணம் என்று போற்றுகிறார்கள் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.









இந்த நாளில், அரசும் வேம்பும் இணைந்திருக்கும் இடத்தில், அந்த மரத்துக்கு , சூர்யோதய காலத்தில், அதாவது அதிகாலையில், மஞ்சளிட்டு, குங்குமம் வைத்து, பூக்களைச் சொரிந்து வழிபடுவார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், மரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்வார்கள். இந்த நாளில், அமாசோமப் பிரதட்சிண நாளில், சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஜாக்கெட் பிட் முதலானவற்றில் ஏதேனும் ஓர் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கினால், வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் ஆசி கிடைக்கும். பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும்.



19.12.17 செவ்வாய்க்கிழமை. சனிப்பெயர்ச்சி. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி, இன்றைய நாளில் நடைபெறுகிறது. எனவே, இந்த நாளில், அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, சிவபார்வதியை வழிபடுங்கள். நவக்கிரகங்களில் ஒன்றாகக் காட்சி தரும் சனீஸ்வரருக்கு வஸ்திரம் வாங்கி, எள்தீபமேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இயலாதோருக்கும் உடல் ஊனமுற்றோருக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். சனி பகவானின் கருணை நம் விழும் என்பது உறுதி!

22.12.17 வெள்ளி. பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரம் இன்று. எனவே, அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவரை மனதார வழிபடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். அப்படியே தாயாரையும் வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை. சுக்கிர வாரம். இந்த நாளில், தாயாரை வழிபட்டால், வீட்டில் சுபிட்சம் குடியேறும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

24.12.17 ஞாயிற்றுக்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் திருத்தலத்தில். ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடைபெறும். அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தாலும், சிதம்பரத்தில் விமரிசையாக நடைபெறும். திருவாதிரை எனப்படும் ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

25.12.17 திங்கட்கிழமை. இந்த நாள், தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்கள் என்பது உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன. அப்படித் தொடர்ந்து தர்ப்பணம் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும்.

26.12.17 செவ்வாய்க்கிழமை. நீலகண்ட தீட்சிதர் ஆராதனை விழா. சிவாலயங்கள் சிலவற்றில் ஆராதனை விழா, சிறப்பு பூஜைகள் நடைபெறும்.



29.12.17 வெள்ளிக்கிழமை. வைகுண்ட ஏகாதசி. அற்புதமான நாள். வைஷ்ணவ ஆலயங்கள் பலவற்றில், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில், பெருமாள் கோயிலுக்குச் சென்று, சொர்க்கவாசல் தரிசனம் செய்து,விரதம் இருப்பார்கள் பக்தர்கள். தரிசனம் முடிந்ததும் விரதம் தொடங்கி, அன்றிரவு தூங்காமல் கண் விழித்து, மறுநாள் துவாதசியில் விரதம் முடித்தால், மோட்சகதி அடையலாம் என்பது ஐதீகம்!

30.12.17 சனிக்கிழமை. இன்றைய தினம், இரண்டு விசேஷங்கள். ஒன்று கார்த்திகை விரதம் மேற்கொண்டு கார்த்திகேயனை வழிபடும் நாள். அப்படி விரதம் இருந்து தரிசிக்க, அருளும் பொருளும் அள்ளித் தருவான் வடிவேலன்.

அடுத்து, பிரதோஷம். சனிப்பிரதோஷம். சனிக்கிழமை பிரதோஷம் வருவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சனிப் பிரதோஷ தரிசனம்... சர்வ பாப விமோசனம் என்றொரு சொல், வழக்கத்தில் இருக்கிறது. ஆகவே இந்தநாளில், சனிப்பிரதோஷ வேளையில், சிவாலயம் செல்லுங்கள். செவ்வரளி சார்த்துங்கள். வில்வம் வழங்குங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். சகல யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்!

1.1.18 திங்கட்கிழமை. தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில், திருத்தேரோட்ட வைபவம்.

2.1.18 செவ்வாய்க்கிழமை. ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மரகத நடராஜர், நெல்லையப்பர், செப்பறை நடராஜர், ஊட்டத்தூர் நடராஜர், திருவாசி நடராஜர், தண்டந்தோட்டம் நடராஜர் முதலான பிரசித்தி பெற்ற நடராஜர் ஆலயங்களிலும் நடராஜர் சந்நிதியிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள், விசேஷ பூஜைகள் சிறப்புற நடைபெறும்.

மேலும் அன்றைய தினம் பெளர்ணமி நன்னாள். கூடுதல் சிறப்பு. கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்!

3.1.18 புதன்கிழமை. பகவான் ஸ்ரீரமண ர் ஜயந்தி நன்னாள். பகவான் ரமணரின் அவதாரத் திருநாள். அற்புத மகானைத் தொழுது போற்றுவோம்.

5.1.18 வியாழக்கிழமை. சங்கடஹர சதுர்த்தி. விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான நாள். மாலையில், பிள்ளையார் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். எல்லா சங்கடங்களும் தீரும்.

6.1.18 வெள்ளிக்கிழமை. பஞ்சமி திதி. திருவையாறு தியாகராஜர் ஆராதனை. திருவையாறில், தியாகப்பிரம்மத்தின் அதிஷ்டானத்தில், இசைக்கலைஞர்கள் சூழ, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெறும். அனைத்து கலைஞர்களும் ஒன்று சேர, பஞ்சரத்னக் கீர்த்தனை பாடி, தியாகப்பிரம்மத்தை வணங்குவார்கள்.

இதேநாளில், திருவெண்காடு அகோரமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை. எதிரிகள் தொல்லை ஒழியவும் எதிர்ப்புகள் விலகவும் தடைகள் தகர்ந்து, வாழ்வில் முன்னேறவும் அகோர மூர்த்தி வழிபாடு பேருதவி செய்யும்.

7.1.18 சனிக்கிழமை. பூர நட்சத்திர நன்னாள். மார்கழி வேளையில், ஆண்டாளின் திருப்பாவை, ஆலயங்களில் பாடப்படும் அற்புதமான வேளையில், ஆண்டாளின் திருநட்சத்திரமான பூர நாளில், ஆண்டாளைத் தரிசித்து வழிபடுவோம்.

9.1.18 செவ்வாய். அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு, கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும். கவலைகள் அனைத்தையும் போக்கும். எனவே காலபைரவருக்கு வடை மாலை சார்த்தலாம். மிளகு சாதம் , மிளகு கலந்த பொங்கல் நைவேத்தியம் செய்து வணங்கலாம். பைரவருக்கு செவ்வரளி மாலை ரொம்பவே விசேஷம் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

11.1.18 வியாழக்கிழமை. தசமி. இந்தநாளில்தான் கூடாரவல்லி கொண்டாடப்படுகிறது. ஆண்டாளை, ஸ்ரீரங்கநாதர் ஆட்கொண்டருளிய அற்புத நாள். இந்த நாளில், பெருமாளையும் ஆண்டாளையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், பெண்களின் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல கணவன் அமையப் பெறுவார்கள். இல்லம் செழிக்கும். வம்சம் தழைக்கும்!

12.1.18 வெள்ளிக்கிழமை. ஏகாதசி. மாதந்தோறும் வருகிற ஏகாதசி. பெருமாளை நினைத்து விரதம் இருக்கலாம். நற்பலன்களைப் பெறலாம்!

13.1.18 சனிக்கிழமை. போகிப் பண்டிகைத் திருநாள். பழையன கழித்து, புதியன கொண்டு வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான நாள்.

நல்ல நல்ல சத்விஷயங்களையெல்லாம் வேண்டுதலாக, பிரார்த்தனையாக, வழிபாடாக, பூஜையாகச் செய்யத் தொடங்குங்கள். எல்லா நல்லதுகளும் உங்களை வந்தடையும் என்பது உறுதி என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024