Thursday, December 7, 2017

நிதி சொல்லும் நீதி

By எஸ். ராஜசேகரன் | Published on : 07th December 2017 01:17 AM |

| நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை.

பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும். நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்?


ஒரு திரையரங்கில் செலவு செய்கின்ற பணத்தையோ அல்லது ஒரு வணிக வளாகத்தில் குடும்பத்துடன் சென்று செலவழிக்கின்ற தொகையோ அதை நாம் ஈட்டுவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் என்பதை உணர்கிறார்களா? அல்லது அந்த வருமானத்தை ஈட்டுவதற்குரிய தகுதியைப் பெறுவதற்கு எவ்வளவு முயற்சிகள் செய்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறார்களா?


உஙஐ என்ற முறையை வணிக உலகில் அறிமுகப்படுத்திய பின்புதான் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உஙஐ என்பது எளிய மாதத்தவணை என்று பொருள்படும். அதாவது எவ்வளவு விலை உயர்ந்த பொருள்களாக இருந்தாலும் அதற்கு ஒரு குறைந்த முன்பணம் மட்டும் செலுத்திவிட்டு அந்தப் பொருளை நாம் உடமையாக்கிக் கொள்ள முடியும். பின்பு மீதம் உள்ள தொகையை வட்டி கணக்கிட்டு அதை அசலுடன் கூட்டிய பின் அதை சம மாதத் தவணைகளாகப் பிரிக்கும் பொழுது செலுத்த வேண்டிய தொகை மிகவும் எளிதாகத் தெரியும்.
அதிலும் பணம் செலுத்த வேண்டிய மாதங்களின் எண்ணிக்கையின் கால அளவை அதிகரித்தால், செலுத்த வேண்டிய பணம் இன்னும் குறைவாகத் தெரியும். ஆனால், அதற்கான வட்டி பல மடங்கு கூடிவிடும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை.


நாம் வாங்கும் பொருள் நமக்கு அவசியம்தானா? என்று யாரும் சிந்திப்பதில்லை. தேவையற்ற பொருளை வாங்குவதற்காக தனது எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். சிற்சில சூழ்நிலைகளில் அவசியமற்ற பொருளை வாங்க நினைத்து, அதற்காக அவசியமான பொருளைக் கூட விற்க நேரிடுகிறது.


மிகப் பெரிய செலவு செய்து உங்கள் பிள்ளைகளைப் படிப்பதற்கு அனுப்புகிறீர்களே, அந்த நிறுவனத்தின் தரத்தை என்றாவது தெரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா? அல்லது இந்தப் படிப்பை உங்கள் பிள்ளைகள் படித்தால்தான் உங்களை இந்தச் சமுதாயம் மதிக்கும் என்பதற்காகக் குறிப்பட்ட பாடப் பிரிவில் சேர்த்தீர்களே, அந்தப் பாடப் பிரிவுக்குரிய வேலை வாய்ப்பு குறித்து என்றுமே சிந்துத்துப் பார்த்து இருக்க மாட்டீர்கள்.
குழந்தைகளுக்குக் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்தச் செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் தகுதியைப் பெரிதாகக் காட்டிக் கொள்வதற்காக வீண்செலவு செய்யாதீர்கள். பிள்ளைகளும் அதையே பின்பற்றுவார்கள்.


உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனைக் கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.


அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அநாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும்.


பொருளை ஈட்டுவது முக்கியமல்ல, ஈட்டிய பொருளை திறமையாகக் கையாள்வது குறித்த விழிப்புணர்வையும் நம் குழந்தைகளுக்கு நாம் வழங்கினால், நம் நாடும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துவிடும்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...