Tuesday, December 12, 2017

அரசின் அலட்சியத்துக்கு இன்னும் எவ்வளவு பேர் வதைபட வேண்டும்?

Published : 04 Dec 2017 09:16 IST

புயலோ பெருமழையோ எங்கள் ஊருக்கெல்லாம் வரவே கூடாது என்று பிரார்த்தனை நடத்துவதைத் தவிர, தமிழ்நாட்டு மக்களுக்கு வேறு வழியில்லை போல இருக்கிறது. ஒரு சாதாரண புயல் அல்லது பெருமழைக்கு மக்கள் இங்கு கொடுக்க வேண்டியிருக்கும் விலை ஆட்சியாளர்கள் மீது கோபத்தையும் ஏமாற்றத்தையுமே உருவாக்குகிறது. 2015-ல் சென்னை, கடலூர் மக்கள் பட்ட துயரத்தை இன்று குமரி மக்கள் எதிர்கொள்ள நேர்ந்திருப்பது உண்மையாகவே வெட்கக்கேடு.

கன்னியாகுமரிக்குத் தென் கிழக்கே உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘ஒக்கி’ புயலாக உருவெடுத்தது. தொடர்ந்து அதே இடத்தில் அது மையம் கொண்டிருந்ததால், சுமார் 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் சூறைக்காற்றின் வீச்சுக்குச் சிக்குண்டதோடு, தொடர் கனமழையும் கொட்டியது. வியாழன் இரவு - வெள்ளி பகல் மழைக் காற்றுக்கே குமரி பெரும் சேதங்களைக் கண்டது. இழப்புகளில் பெரும்பாலானவை அரசு நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக உருவானவை என்பதுதான் அரசைச் சாடக் காரணமாகிறது.

நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. 1,096 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள். குறிப்பாக, குமரி மாவட்டத்தின் கடலோடிகள் ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்பவர்கள். குமரியை ஒட்டிய கடல் பரப்பு ஆழமானது, பாறைகளை அதிகம் கொண்டது என்பதோடு கடலடி அதிகம் உள்ளது. முன்கூட்டிய எச்சரிக்கையும் நடவடிக்கைகளும் மிக மிக அவசியமானவை. ஆனால், அந்தப் பிரக்ஞையே இல்லாமல் செயல்பட்டதுபோல இருக்கிறது குமரி மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு. புயலின் தாக்குதல் தொடங்கிய காலையில், பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பை வெளியிடுகையில்கூட ‘புயல்’ என்ற வார்த்தையையே உச்சரிக் காத அதிகாரிகளின் அலட்சியத்தை என்னவென்று சொல்வது? உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டல்களை அதிகாரிகளுக்கு அனுப்பாத ஆட்சியாளர்களை எப்படிப் பார்ப்பது?

புயலுக்குப் பின் குமரியிலிருந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் ஆழ்த்துகின்றன. எடுத்த எடுப்பிலேயே, ‘புயலுக்கு ஏழு பேர் பலி’ என்ற செய்தியில் தொடங்கி, அரசு நிர்வாகத்திடம் இருந்து உரிய எச்சரிக்கை வராததால், ‘கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான கடலோடிகளைக் காணவில்லை’ என்கிற செய்தி வரை. நீர்நிலைகளோ, வெள்ளம் செல்லத்தக்க கால்வாய்களோ உரிய வகை யில் தூர்வாரப்படாததால் மாவட்டத்திலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் தொடக்கத்திலேயே நிரம்பி, வெள்ளம் வீதிகளிலும் சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. மேலும், வெள்ளம் எங்கும் சூழ்ந்த நிலையில், குடிக்கவும் சமைக்கவும் தண்ணீர் இல்லாமல் அல்லலுற்றிருக்கின்றனர் மக்கள். கிட்டத்தட்ட 4 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்திருக்கின்றன. 1,500 மீட்டர் உயர் மின் அழுத்தப் பாதையும், 2,400 மீட்டர் குறைந்த மின் அழுத்தப் பாதையும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. “மின் விநியோகம் சீர் குலைந்ததன் விளைவாக இருட்டில் சிக்கியிருக்கிறார் கள் மக்கள். உரிய முன்னேற்பாடுகள் இல்லாததால், மெழுகுவத்திகூடக் கிடைக்கவில்லை. ரொட்டிக்கும் பாலுக்கும் அலைந்தார்கள்” என்ற தகவல்கள் ஜீரணிக்க முடியாதவையாக இருக்கின்றன.

நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி, நம் அரசிடம் இருக்கும் நவீன வசதிகள், ஒரு பேரிடரை எதிர்கொள்ள நமக்குள்ள சாத்தியங்கள் இவற்றையெல்லாம் குறித்து நம்முடைய ஆட்சியாளர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இருக்கிறதா என்றேகூடத் தெரியவில்லை. ‘கடலுக்குச் சென்ற கடலோடிகளைத் தேட ஹெலிகாப்டர் அனுப்புங்கள்’ என்று, மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை வைக்கக்கூட மக்கள் போராட வேண்டும் என்றால், இதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது? உலகின் நான்காவது பெரிய தரைப் படை, விமானப் படைகளையும் ஏழாவது பெரிய கடல் படையையும் கொண்ட நாடு இது. இது தவிர, பேரிடர் மேலாண்மை நிபுணர் படை ஒன்றும் நம்மிடம் இருக்கிறது. இக்கட்டான தருணத்தில் மக்களை மீட்க இவர்கள் உதவியைக் கோருவதிலும் பெறுவதிலும் என்ன சிக்கல்! முன்கூட்டி இதற்கெல் லாம் திட்டமிட்டு, மக்களை இடர்களிலிருந்து காப்பதைக் காட்டிலும் ஒரு அரசுக்கு என்ன பெரிய வேலை?

எதிர்பாராததை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை யாக நடவடிக்கை எடுப்பதே பேரிடர் மேலாண்மை. ‘இவை நடக்கும்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டும், தன்னைத் திருத்திக்கொள்ளாமல் மக்களைப் பலி கொடுப்பதும் துயருக்குள்ளாக்குவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், பேரிடர் மேலாண்மையைக் கற்றுக்கொள்ள மக்கள் இன்னும் எவ்வளவு வதைபட வேண்டும்!

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...