Sunday, December 10, 2017


திருப்பதியில் இலவச தரிசன முறையில் மாற்றம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Published : 09 Dec 2017 07:31 IST

என். மகேஷ்குமார் திருமலை



திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசன (சர்வ தரிசனம்) முறையில் தரிசனம் செய்ய சில மாற்றங்களை வரும் 18ம் தேதி முதல் சோதனை முறையில் அமல்படுத்த உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஏழுமலையானை இலவச தரிசனம் (சர்வ தரிசனம்) மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் முக்கிய நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

டைம் ஸ்லாட் முறை

பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வரும் 18ம் தேதி முதல் ‘டைம் ஸ்லாட்’ முறை சோதனை முறையில் அமல் படுத்தப்பட உள்ளது.

18ம் தேதி முதல் அமல்

அதன்படி, சர்வ தரிசன முறையில் ஏழுமலையானை தரிசிக்க திருமலை வரும் பக்தர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் டோக்கன் முறை அமல் படுத்தப்படும். இதற்காக திருமலையில் 14 இடங்களில், 117 டோக்கன் விநியோக மையங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதில் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இவர்கள் திவ்ய தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் சர்வ தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவர். 7 நாட்கள் வரை இந்த முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும். பக்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இது நிரந்தரமாக்கவோ அல்லது நிறுத்துவதோ முடிவு செய்யப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024